‛பயங்கரவாதிகளுக்கு சீனா ஆயுத சப்ளை': மியான்மர் குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
‛பயங்கரவாதிகளுக்கு சீனா ஆயுத சப்ளை: மியான்மர் குற்றச்சாட்டு

நய்பிடாவ்: மியான்மரில் அரசுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள் அளித்து சீனா உதவி வருவதாகவும், இதனை அடக்குவதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என மியான்மர் கோரிக்கை விடுத்துள்ளது.

மியான்மரில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் வலுவான சக்திகளால் ஆதரிக்கப்படுவதாகவும், கிளர்ச்சிக் குழுக்களை அடக்குவதற்கு சர்வதேச ஒத்துழைப்பைக் கோருவதாகவும் மியான்மரின் ராணுவ தலைமை தளபதி மின் ஆங் ஹேலிங், ரஷ்ய நாட்டின் அரசு தொலைக்காட்சியான ஸ்வெஸ்டா டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். வலுவான சக்தி என ஜெனரல் குறிப்பிடுவது அண்டை நாடான சீனா தான்.

ராணுவ தலைமை தளபதி மின் ஆங் ஹேலிங்கின் குற்றச்சாட்டு தொடர்பாக மியான்மர் ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ஸா மின் துன், ‛சீனாவின் எல்லையான மேற்கு மியான்மரில் ராகைன் மாநிலத்தில் செயல்படும் அரக்கன் ராணுவம் (ஏஏ) மற்றும் அரக்கன் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி (ஏஆர்எஸ்ஏ), பயங்கரவாத அமைப்புகளைக் குறிப்பிடுகிறார். அரக்கன் ராணுவத்தின் பின்னால் ஒரு 'அன்னிய சக்தி' உள்ளது. 2019ல் ராணுவம் மீதான சுரங்கத் தாக்குதல்களில் பயங்கரவாதக் குழு பயன்படுத்திய ஆயுதங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது' என மேற்கோள் காட்டினார்.

தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் மிகவும் நெருங்கிய நட்பு நாடாக அறியப்படும் மியான்மர் இது போன்று குற்றம்சாட்டுவது வழக்கத்திற்கு மாறான ஒன்று. ஆனால் இதுபோன்று குற்றச்சாட்டை கூறுவது முதன்முறை அல்ல. கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் தடைசெய்யப்பட்ட தாங்க் தேசிய விடுதலை ராணுவம் மீது தாக்குதல் நடத்திய போது, ஒவ்வொன்றும் 70,000 முதல் 90,000 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள மேற்பரப்பில் இருந்து தாக்ககூடிய வான் ஏவுகணைகள் உட்பட ஒரு பெரிய ஆயுதங்களை மியான்மர் ராணுவம் கைப்பற்றியது. ராணுவம் ஆயுதங்களுக்கான சீன தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டியது. பறிமுதல் செய்யப்பட்ட பெரும்பாலான ஆயுதங்கள் சீனாவின் ஆயுதங்கள் ஆகும்.

சீன எல்லையில் செயல்படும் மியான்மரீஸ் கிளர்ச்சிக் குழுக்கள் பெரும்பாலும் சீன ஆயுதங்களை பயன்படுத்துகின்றன. இது மியான்மரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான சீனாவின் முயற்சி என சந்தேகங்களைத் தூண்டுகிறது. ஆனால் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள் வழங்குவதாக கூறும் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. ஆனால் இதனை மியான்மர் அரசும் சந்தேகத்தோடு தான் அணுகுகிறது.

ஜனவரியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த போது, மியான்மர் ராணுவ தளபதி மின் ஆங் ஹேலிங் இது தொடர்பாக மியான்மரின் கவலையை தெரிவித்துள்ளார். சீன ஆயுதங்கள் பயங்கரவாதிகளுக்கு வேறு வழியில் கிடைக்குமென்பதை சுட்டிக்காட்டி, சீனா இந்த விவகாரத்தை கவனமாக ஆராய்ந்து பிரச்னையை தீர்க்கும் என்று ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.

ஆனால், ஜின்பிங்கின் பரிந்துரை அண்டை நாடான மியான்மரில் நிலையற்றதாக வைத்திருக்க முயற்சிக்கும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஒரே மண்டலம் ஒரே பாதை (OBOR) திட்டத்தை செயல்படுத்த, மியான்மர் அரசுடன் பேச பயங்கரவாத குழுக்களுடன் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்துகிறது என நய்பிடாவில் ஒரு கருத்து உள்ளது.

மியான்மருக்கு பொருளாதார ரீதியாக உதவுவதன் மூலம் வங்களா விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கில் சீனா, தன்னுடைய கால்தடத்தை பதிக்க முயற்சிக்கிறது. சில திட்டங்களை நிறைவேற்ற சீனா கடன் அளிப்பது குறித்து கவலைகள் உள்ளன. சீனா விரிக்கும் கடன் வலையில் மியான்மர் சிக்கிவிட கூடாதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை