ஜடேஜாவுக்கு ‘விஸ்டன்’ கவுரவம் * நுாற்றாண்டின் மதிப்பு மிக்க வீரர் | ஜூலை 01, 2020

தினமலர்  தினமலர்
ஜடேஜாவுக்கு ‘விஸ்டன்’ கவுரவம் * நுாற்றாண்டின் மதிப்பு மிக்க வீரர் | ஜூலை 01, 2020

புதுடில்லி: ‘விஸ்டன்’ இதழ் சார்பில், 21ம் நுாற்றாண்டின் மதிப்பு மிக்க இந்திய டெஸ்ட் வீரராக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.

கிரிக்கெட் தொடர்பான இணையதள பத்திரிகை ‘விஸ்டன்’. இதன் சார்பில் 21ம் நுாற்றாண்டின் சிறந்த மதிப்பு மிக்க டெஸ்ட் வீரர் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தியது. பல்வேறு முன்னணி வீரர்களை பின்தள்ளி, இந்திய சார்பில் சிறந்த டெஸ்ட் வீரராக சுழற்பந்துவீச்சு ‘ஆல் ரவுண்டர்’ ஜடேஜா தேர்வானார்.

இவர் 97.3 புள்ளிகள் பெற்று, உலகளவில் ‘நம்பர்–1’ இடம் பெற்ற இலங்கை முன்னாள் சுழல் ‘ஜாம்பவான்’ முரளிதரனுக்கு அடுத்து இரண்டாவது இடம் பிடித்தார். 2012 முதல் 49 டெஸ்டில், ஜடேஜா 1,869 ரன்கள் எடுத்து, 213 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து ‘விஸ்டன்’ இதழின் பிரெட்டீ வைல்டு கூறியது:

இந்தியாவில் ஜடேஜா முதலிடம் பிடித்தது ஆச்சரியமாக இருந்தது. டெஸ்ட் அணியில் இவர் வழக்கமாக இடம் பெறும் வீரர் இல்லை என்றாலும், களமிறங்கும் போட்டிகளில் ‘நம்பர்–1’ பவுலராக உள்ளார். பேட்டிங்கில் 6 வது இடத்தில் வந்து, அணிக்கு தேவையான ரன்குவிப்பை தருகிறார்.

ஜடேஜாவின் பந்து வீச்சு சராசரி (24.62), ஷேன் வார்னை (ஆஸி.,) விட அதிகமாகவும், பேட்டிங் சராசரி (35.26), ஷேன் வாட்சனை (ஆஸி.,) விட முன்னிலையிலும் உள்ளது. ஒட்டுமொத்தமாக பேட்டிங், பவுலிங் சராசரி வித்தியாசம் 10.62 ஆக உள்ளது.

இதனால், இந்த நுாற்றாண்டில் 1000 ரன்கள் எடுத்து, 150 விக்கெட்டுகள் வீழ்த்திய ‘ஆல் ரவுண்டர்கள்’ வரிசையில், இவர் இரண்டாவது இடம் பிடித்தார். சுழலுக்கு கைகொடுக்காத ஆடுகளத்திலும் அசத்தும், மிகத் தரமான ‘ஆல் ரவுண்டர்’ இவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

அதிர்ஷ்டசாலி

ஜடேஜா கூறுகையில்,‘‘இந்தியாவுக்காக விளையாடுவது ஒரு கனவாக இருந்தது. அதற்கும் மேலாக, மிகவும் மதிப்பான வீரர் என்ற கவுரவம் கிடைக்கும் போது, கூடுதல் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இதற்காக சக வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,’’ என்றார்.

மூலக்கதை