அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகளாவிய பெருந்தொற்று மீண்டும் வேகமெடுக்கிறது என உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் 52 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே கொரோனா வைரஸால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. இதன் காரணமாக டிரம்பின் கோபம் சீனா மீது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்ததால், மொத்த பாதிப்பு 27.4 லட்சமாக உயர்ந்துள்ளது. 700 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 1.3 லட்சமானது. எனவே கலிபோர்னியாவிலிருந்து புளோரிடா வரை உணவகங்கள், பார்கள் மற்றும் கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.


அமெரிக்கா வார இறுதி நாளான ஜூலை 4-ம் தேதி சுதந்திர தின விழாவுக்கு தயாராகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தொற்று பாதிப்பு புதிய உச்சமாக 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இது அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுதந்திர தின விழாவை கொண்டாட பிற மாகாணங்களுக்கு செல்பவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள உணவகங்களில் டைன் - இன் சேவையை நிறுத்தியது, அதே போல் நியூயார்க்கும் அடுத்த வாரம் முதல் வாடிக்கையாளர்களை உள்ளே அமர அனுமதிக்கக் கூடாது என கூறியுள்ளது.

இந்த தொற்று ஒரு கட்டத்தில் மறைந்துவிடும் என நம்புவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் டிரம்ப் இதுவரை பொது இடங்களில் முகக்கவசம் அணிந்ததே இல்லை. அது குறித்து கேட்டதற்கு, அதனால் எந்த பிரச்னையும் கிடையாது என்று தெரிவித்தார். கொரோனா சிகிச்சைக்கு பலன் தரும் மருந்தாக அறியப்படும் டெமிடெசிவிர் மருந்தை, அமெரிக்க அரசாங்கம் மொத்த உற்பத்தியில் 92 சதவீதம் வரை வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது.

மூலக்கதை