பொன்விழா படங்கள்: 'சொர்க்கம்' - ஒரே காட்சியில் உருக வைத்த ஜூலியஸ் ஜீசர்

தினமலர்  தினமலர்
பொன்விழா படங்கள்: சொர்க்கம்  ஒரே காட்சியில் உருக வைத்த ஜூலியஸ் ஜீசர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பக்கா கமர்ஷியல் படங்களில் ஒன்று சொர்க்கம். இந்த படத்தில் சிவாஜி ஜூலியஸ் சீசராக நடித்தது சினிமா வரலாற்றின் முக்கிய நிகழ்வு. சிவாஜி வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், ராஜராஜ சோழன் போன்று மேலும் பல வரலாற்று படங்களில் நடிக்க நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை.

அதனால் தான் நடிக்க ஆசைப்பட்ட கேரக்டர்களை சின்ன சின்ன துளிகளாக நடித்து தன் ஆசையை தீர்த்துக் கொண்டார். அந்த வரிசையில் சொர்க்கம் படத்தில் ஜூலியஸ் சீசராக நடித்தார். படத்தின் கதைப்படி தனது நண்பன் கே.பாலாஜியே தனக்கு வில்லனாக வந்து நிற்கும்போது சிவாஜி சொல்வார் "நாம் கல்லூரியில் படிக்கும்போது ஜூலியஸ் சீசர் நாடகத்தில் நடித்தோம். நான் சீசராகவும், நீ புளூட்டசாகவும் நடித்தாய் அது நாடகம் இது நிஜம்" என்பார். அப்போது அந்த நாடக காட்சி விரியும்.

ஜூலியஸ் சீசர் தன் நண்பர்களாலேயே குத்தி கொலை செய்யப்படும் அந்த காட்சியில் அதி அற்புதமாக சிவாஜி நடித்திருப்பதார். கே.பாலாஜி கடைசியாக குத்தும்போது "ஆர் யூ புரூட்டஸ்" என்றபடி அவர் ரத்த வெள்ளத்தில் விழும் காட்சி காண்பவர்களை கலங்க வைத்து விடும்.

சொர்க்கம் படத்தில் சிவாஜியுடன் கே.ஆர்.விஜயா, ராஜஸ்ரீ, கே.பாலாஜி, முத்துராமன், மனோகர், எம்.ஆர்.ஆர்.வாசு, நாகேஷ், சச்சு உள்பட பலர் நடித்திருந்தார்கள். டி.ஆர்.ராமண்ணா இயக்கி, தயாரித்திருந்தார்.

எம்.எஸ்.விஸ்வாதன் இசையில் இடம்பெற்ற பொன்மகள் வந்தாள்... பாடல் இன்றைக்கும் புத்தம் புதிதாக ஜொலிக்கும். சிவாஜியும், விஜயலலிதாவும் ஆடும் இந்த பாடல் தியேட்டர்களில் பலமுறை ஒன்ஸ்மோர் கேட்ட பாடல். பிரமாண்ட செட் போட்டு இதனை படமாக்கி இருந்தார்கள். இந்த படம் வெளியான தியேட்டர்களில் படம் முடிந்ததும் மீண்டும் ஒருமுறை பொன்மகள் வந்தாள் பாடலை திரையிடுவார்களாம். 100 நாட்கள் ஓடி வெற்றிகண்ட படம்.

மூலக்கதை