டிக் டாக் செயலிக்கு தடைவிதிப்பு மத்திய அரசு மீதான வழக்குகளில் ஆஜராக மாட்டேன்: முகுல் ரோத்தகி அதிரடி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
டிக் டாக் செயலிக்கு தடைவிதிப்பு மத்திய அரசு மீதான வழக்குகளில் ஆஜராக மாட்டேன்: முகுல் ரோத்தகி அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக் டாக்கிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால் மத்திய அரசுக்கு எதிராக ஆஜராகி நான் கண்டிப்பாக வாதிட மாட்டேன்,’ என மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நேற்று காட்டமாக அறிவித்துள்ளார். சீன அரசுக்கு எதிராக உருவாகியுள்ள மோதலால் அந்த நாட்டின் 59 செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை இரவு தடை விதித்தது. அதில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் டிக் டாக், ஹலோ  மற்றும் யு.சி.புரோசர் உள்ளிட்டவைகளும் அடங்கும். இதில், குறிப்பாக மற்ற செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் அதில் பணியாற்றிய ஊழியர்கள் பணி பறிபோகும் என்ற பிரச்னைகள் இருந்து வந்தாலும், டிக் டாக்கிற்கு தடைவிதிக்கப்பட்டது தான் அதனை பயன்படுத்தி வந்தவர்களின் தூக்கத்தை கலைத்து விட்டது. இதில், நவீன கூத்துபட்டறையாக திகழ்ந்த டிக் டாக்கிற்கு விதிக்கப்பட்ட திடீர் தடையால் இந்தியாவில் 14 மொழிகளில் டிக் டாக்கில் இயங்கும் அத்தனை ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டிக் டாக் செயலிக்கு ஊடக வெளிச்சம் பட முடியாத பல திறமைசாளிகளை வெளி உலகத்திற்கு காட்டியதில் பெரும் பங்கு உண்டு என்பதால், அது மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து விட்டது என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில், சீன செயலிகளுக்கு தடை என்ற இந்திய அரசு அறிவித்த சில மணி நேரத்திலேயே டிக் டாக் தரப்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், ‘எந்த ஒரு தகவலையும் டிக் டாக்கின் மூலம் நாங்கள் வெளியிட மாட்டோம். இந்த விவகாரத்தில் இந்திய அரசு கூறும் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் நாங்கள் ஒத்துழைக்கிறோம்.’ என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மத்திய அரசு தரப்பில் அதற்கு எந்தவித மறுபதிலும் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை.இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் மத்திய தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்தியா - சீனா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு பிறகு சீன அரசுக்கு எதிராக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதில் வணிக செய்யும் விதமாக பல முக்கிய காரணங்கள் இரு நாடுகளுக்கு இடையே இருந்து வருகிறது. இதுபோன்ற சூழலில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீனா நாட்டின் செயலிகளை பயன்படுத்த இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதி,ல் டிக் டாக்கும் ஒன்றாகும். இதில், ஒருவேளை இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால் மத்திய அரசுக்கு எதிராகவோ அல்லது சீன அரசுக்கு ஆதராகவோ கண்டிப்பாக ஆஜராகி வாதிட மாட்டேன்,’ என காட்டமாக தெரிவித்துள்ளார்.

மூலக்கதை