ஆப்களை தொடர்ந்து அடுத்த ஆப்பு நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு தடை: மத்திய அமைச்சர் கட்கரி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஆப்களை தொடர்ந்து அடுத்த ஆப்பு நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு தடை: மத்திய அமைச்சர் கட்கரி அறிவிப்பு

புதுடெல்லி: கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள மக்களிடம், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் எழுந்துள்ளது. இதனிடையே, சீனாவின் அராஜக போக்கை கண்டிக்கும் விதமாக, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவில் சாலை கட்டுமான பணிகளில், பங்குதார‍ராக கூட உள்ள சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இதில், மத்திய அரசு உறுதியான நிலைபாட்டை எடுத்துள்ளது. நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களை தடை செய்யவும், இந்திய நிறுவனங்களுக்கு விதிகளை தளர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடங்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் சில திட்டங்களில் சீன நிறுவனங்கள் இருந்தாலும் கூட, இனி வரும் காலங்களில் அவற்றுக்கு தடை விதிக்கப்படும்.  கட்டுமான விதிகளை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை மாற்றுவதன் மூலம், இந்திய நிறுவனங்கள் அதிகளவில் பயனடையும். தொழில்நுட்பம், ஆலோசனை, வடிவமைப்பு ஆகியவற்றில் சீன நிறுவனங்களை பங்குதார‍ராக கூட அனுமதிக்க மாட்டோம். தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த வெளிநாட்டு முதலீடு ஊக்குவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.* தெர்மல் கேமரா வாங்குவதற்கான டெண்டரை நிறுத்தியது ரயில்வேகொரோனா பரவியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் உடல் வெப்பநிலையை கண்காணிக்க, 800 தெர்மல் கேமராக்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ரயில்வே பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் வெளியிட்டது. இதற்கு சீன நிறுவனங்களும் போட்டி போட்டன. இந்நிலையில், இந்த கேமராவில் இருக்க வேண்டிய வசதிகள் குறித்து வெளியிடப்பட்ட விதிமுறைகள், சீன நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாக ரயில்வே அமைச்சகத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, இந்த டெண்டரையே ரயில்வே அமைச்சகம் நேற்று ரத்து செய்தது.

மூலக்கதை