பெண் பார்க்க வந்ததாக நாடகமாடியவர்கள் நடிகை பூர்ணாவை கடத்தி பணம் பறிக்க கும்பல் சதி: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தினகரன்  தினகரன்
பெண் பார்க்க வந்ததாக நாடகமாடியவர்கள் நடிகை பூர்ணாவை கடத்தி பணம் பறிக்க கும்பல் சதி: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

திருவனந்தபுரம்: நடிகை பூர்ணாவை பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டதாக தெரிய வந்துள்ளது. கேரளாவில் பிரபலநடிகை பூர்ணாவை பெண் பார்ப்பதுபோல் பழகி பணம் பறிக்க முயன்ற வழக்கில் கொச்சி மரடு போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் தர்மஜன் போல்காட்டியிடமும். சினிமா தயாரிப்பு நிர்வாகி ஷாஜியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். ஐதராபாத்தில் இருந்த பூர்ணா, போலீசார் கேட்டுக்கொண்டதால் கொச்சி திரும்பினார். நேற்று முன்தினம் இரவு பூர்ணாவிடம் போலீசார் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கொச்சி போலீஸ் கமிஷனர் விஜய் சாக்கரே நேற்று கூறியதாவது: நடிகை பூர்ணாவை மிரட்டிய சம்பவத்தில் 12 பேருக்கு தொடர்பு உள்ளது. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேரை தேடி வருகிறோம். இவர்கள் மாடல் அழகிகளை அறையில் அடைத்து மிரட்டியது பற்றி, 20க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் புகார்  கொடுத்துள்ளனர். கைதானவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் பூர்ணாவை கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டது தெரியவந்தது. முதலில் தங்கம் கடத்துவதற்காகத்தான் அவரை கும்பல் அணுகியுள்ளது. அதற்கு மறுத்துள்ளார். இதையடுத்து, அந்த கும்பலை சேர்ந்த ஹாரிஸ், ரபீக் மற்றும் ஷெரீப் ஆகியோர் தங்கள் திட்டத்தை மாற்றி பெண் பார்க்கும் படலத்தை அரங்கேற்றி உள்ளனர். ஆனால், பூர்ணா போலீசில்  புகார் கொடுத்ததால் கும்பலின் திட்டம் தோல்வியடைந்தது. இவ்வாறு அவர்  கூறினார்.* கும்பலுக்கு உதவிய குழந்தைநடிகை பூர்ணா கூறுகையில், ‘‘கடந்த மே 25ம் தேதி பெண் பார்ப்பதாக கூறி 6 பேர் என் வீட்டிற்கு வந்தனர். நம்பத்தகுந்த விதத்தில் அவர்கள் நடந்து கொண்டனர். இவர்கள் இவ்வளவு பெரிய மோசடி கும்பலாக இருப்பார்கள் என்று எங்கள் குடும்பத்தினர் கருதவில்லை. தங்கம் கடத்தல் குறித்து என்னிடம் அவர்கள் எதுவும் பேசவில்லை. மேலும், என்னை வேறு ஏதாவது வழியில் சதியில் சிக்க வைக்கவும் அவர்கள் திட்டமிட்டிருக்கலாம்.  இந்த கும்பலை சேர்ந்தவர்கள் தங்கள் சதி திட்டத்திற்கு பெண்கள், குழந்தைகளையும் பயன்படுத்தி உள்ளனர். என்னை பெண் பார்க்க வந்தவரின் உறவினர்கள் என்று கூறி ஒரு சில பெண்கள் என்னிடம் தொலைபேசியில் பேசினர். ஒரு குழந்தையும் பேசியது. அவர்கள் யார் என்று விசாரித்தால் தான் மோசடி கும்பலின் சதி வெளிச்சத்திற்கு வரும்,’’ என்றார்.

மூலக்கதை