'ஹாங்காங்கை சீனா விழுங்குவதை வேடிக்கை பார்க்க முடியாது: மைக் போம்பியோ

தினமலர்  தினமலர்
ஹாங்காங்கை சீனா விழுங்குவதை வேடிக்கை பார்க்க முடியாது: மைக் போம்பியோ

வாஷிங்டன்; ''சீனா, தேசிய பாதுகாப்பு சட்டம் மூலம், ஹாங்காங்கை விழுங்குவதை வேடிக்கை பார்க்க முடியாது,'' என, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், மைக் போம்பியோ எச்சரித்துஉள்ளார்.


சீனாவின், தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழு, ஹாங்காங்கில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து, நேற்று சீன அதிபர் ஜின்பிங் கையொப்பத்துடன், இந்த சட்டம், ஹாங்காங்கில் நடைமுறைக்கு வந்தது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி அறிமுகப்படுத்ப்பட்ட இந்தச் சட்டம், பிரிவினைவாத பிரசாரத்தை, பயங்கரவாத நடவடிக்கையாக கருதி, தண்டிக்க வகை செய்கிறது.இதனால், ஹாங்காங்கில், சீனாவுக்கு எதிராக போராடுவோர் மீது, அடக்குமுறையை கட்டவிழ்த்து விட வாய்ப்பு உள்ளது. அத்துடன், தேசத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், போராட்டக் காரர்களை, 10 ஆண்டு கள் சிறையில் அடைக்கவும், இந்த சட்டம் வகை செய்கிறது. குற்றவாளிகளை நாடு கடத்தவும், இந்த சட்டம் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சட்ட அமலாக்கத்திற்கு, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா ஆதரவு

இது குறித்து, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், மைக் போம்பியோ கூறியதாவது:தேசிய பாதுகாப்பு சட்டம் அமலான நாள், ஹாங்காங் மக்களுக்கும், சீனாவில் சுதந்திரத்தை விரும்புவோருக்கும் ஒரு சோகமான நாள். சீனா, ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமையை அழித்து, சாதனை படைத்துள்ளது. ஹாங்காங்கை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் விழுங்கப் பார்க்கும் சீனாவின் நடவடிக்கையை, அமெரிக்கா அனுமதிக்காது. ஹாங்காங் மக்களின் சுதந்திரம், பேச்சுரிமைக்கு எதிராக, சீனா எடுக்கும் நடவடிக்கைக்கு, தகுந்த பதிலடி கொடுக்கப்படும். ஹாங்காங் மக்களுக்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்.ஹாங்காங் மக்களுக்கு, 50 ஆண்டுகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை, 23 ஆண்டுகளில், சீனா காற்றில் பறக்க விட்டு விட்டது. அதுமட்டுமன்றி, உலக சுகாதார அமைப்பு, உலக வர்த்தக அமைப்பு, ஐ.நா., ஆகியவற்றுடன் செய்து உள்ள ஒப்பந்தத்தையும் சீனா மீறியுள்ளது. இதை, உலக நாடுகள் ஒருபோதும் ஏற்காது.

ஹாங்காங்கிற்கு எதிராக செயல்படும் சீன அதிகாரிகளின் விசாவுக்கு, அமெரிக்கா தடை விதித்து உள்ளது. பார்லி.,யில் தாக்கல்தற்போது, ஹாங்காங்கிற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், சீனாவுக்கு மேற்கொள்ளும் ஏற்றுமதி, மறு ஏற்றுமதி உள்ளிட்ட உரிமங்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு, ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனா, உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை வாபஸ் பெற்று, ஹாங்காங் மற்றும் உலக நாடுகளுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, சீனாவின் அடக்குமுறையால் ஹாங்காங்கில் இருந்து வெளியேறுவோருக்கு, முன்னுரிமை அடிப்படையில் அகதிகள் அந்தஸ்து வழங்குவதற்கான மசோதா, அமெரிக்க பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டம் அவசியம்ஹாங்காங், சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட, 23வது ஆண்டு விழா, நேற்று ஹாங்காங்கில் கொண்டாடப்பட்டது. இதில், ஹாங்காங் செயல் நிர்வாக தலைவர், கேரி லேம் பங்கேற்று, சீன தேசிய கீத பின்னணியில், தேசிய கொடியேற்றி உரையாற்றினார். அப்போது, ''ஹாங்காங் குழப்பத்திற்கு தீர்வு காணவும், ஸ்திரத்தன்மையை பராமரிக்கவும், தேசிய பாதுகாப்பு சட்டம் காலத்தின் கட்டாயம்,'' என, அவர் தெரிவித்தார்.

மூலக்கதை