கழுத்தில் மாட்டிக்கிட்டா போதுமாம்...கொரோனா ஓடிருமாம்...! எப்படியெல்லாம் ஏமாத்துறாய்ங்க...

தினகரன்  தினகரன்
கழுத்தில் மாட்டிக்கிட்டா போதுமாம்...கொரோனா ஓடிருமாம்...! எப்படியெல்லாம் ஏமாத்துறாய்ங்க...

*  ‘வைரஸ் ஷட் அவுட்’ என்ற பெயரில்  வெளிவந்துள்ள போலி சாதனம்*  பல நாடுகளில் விற்பனையாகும் பகீர் தகவல்புதுடெல்லி: கொரோனா வைரசை அழிக்க ‘வைரஸ் ஷட் அவுட்’ என்ற கழுத்தில் மாட்டிக் கொள்ளும் புதிய சாதனம் விற்பனைக்கு வந்துள்ளது. போலியான இந்த சாதனம் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் விற்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய அந்த நோய்த்தொற்று, இன்று உலகம் முழுவதும் 188க்கும் மேற்பட்ட நாடுகளை உலுக்கியெடுத்து வருகிறது. அதிலும், மருத்துவ அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் கொடிகட்டிப் பறந்து வரும் மேலை நாடுகளிலும் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இந்த அசாதாரணமான சூழலில், நோய்த்தொற்றுக்கான பிரத்யேக மருந்தைத் தயாரிக்க கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை பயன்படுத்தப்பட்ட மருந்துகளில், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோடு பல்கலைக்கழகம் ஆய்வு செய்த ‘டெக்ஸாமெதசோன்’ என்ற ஒவ்வாமை மருந்து, கொரோனாவை குணப்படுத்துவதில் அதிக ஆற்றலுடன் செயல்படுவதாகக் கூறுகின்றனர். இருந்தும், செயற்கை சுவாசக் கருவியோ, ஆக்ஸிஜன் கருவியோ பொருத்தத் தேவையில்லாத கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு விகிதத்தில் அந்த மருந்து எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதுதவிர, ‘ரெம்டெசிவிர்’ என்ற மருந்தும் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்குப் பயன்படும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே, மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தும் கொரோனாவை குணப்படுத்தும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. எனினும், அந்த மருந்து குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. உலகளவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயமும் அதிகரித்து வருகிறது. இப்படிெயல்லாம் ஒருபக்கம் மருத்துவ உலகம் போராடி வரும்நிலையில், மாற்று மருத்துவ அல்லது மருந்தை கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக உலகம் முழுவதும் பலர் கிளம்பி உள்ளனர். அறியாமையின் காரணமாக சாராயம் குடித்தும், சானிடைசர் குடித்தும், கண்ட கண்ட கெமிக்கலை குடித்தும் பலர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி கொரோனா தொற்றை தடுக்க ஊமத்தை விஷ செடிகளின் விதைகளை அரைத்து தின்பது, கண்ட கண்ட மருந்து, மாத்திரைகளை தின்றும் சிகிச்சை பெறுவோர் குறித்த செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், ஜப்பான் நிறுவன தயாரிப்பான ‘வைரஸ் ஷட் அவுட்’ என்ற சாதனம் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்றும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அது, ஹாங்காங் போன்ற நாடுகளின் கடைகளில் பரவலாக விற்கப்படுகிறது. ஆசிய கண்டத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கூட, ஹாங்காங் மற்றுமின்றி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ‘வைரஸ் ஷட் அவுட்’ அமோக விற்பனை நடைபெறுகிறது. அதனை வாங்கி பலர் கழுத்தில் மாட்டிக் கொண்டு நம்பிக்கையுடன் திரிகின்றனர்.  இதனை தயாரிக்கும் டொமிட்டின் ‘வைரஸ் ஷட் அவுட்’ உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘இது காற்றின் மூலம் பரவவும் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களை பல்வேறு தொற்றுநோய் வைரஸ்களில் இருந்து தடுக்கும். சோதனை ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் பயன்படுத்தலாம். கழுத்தில் இந்த சாதனைத்தை மாட்டிக்கொண்டால் போதுமானது’ என்கின்றனர். ஆனால், ஹாங்காங் வைராலஜிஸ்ட் மற்றும் நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் அரியேன் டேவிசன் கூறுகையில், ‘வைரஸ் ஷட் அவுட் தயாரிப்பில் குளோரின் டை ஆக்சைடு உள்ளது. இது ஒரு முழுமையான மோசடி வர்த்தகம். சுவாசிக்கும் போது அது வைரஸ்களை செயலிழக்க செய்யாது. ‘வைரஸ் ஷட் அவுட்’ சாதனத்தை கழுத்தில் அணிந்து கொள்கின்றனர். மூக்கு அல்லது வாய்க்கு அருகில் கொண்டு சென்றால், அதிலுள்ள மூலப்பொருளான குளோரின் டை ஆக்சைடை சுவாசிக்க வேண்டியிருக்கும். அப்போது, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டும், கண் எரிச்சல், தோலில் அரிப்பை ஏற்படுத்தும். கடினமான மேற்பரப்புகளில் கிருமி நீக்கம் செய்ய குளோரின் டை ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. பறக்கும் பூச்சிகளை விரட்ட இவை பயன்படுத்தப்படும். கொரோனா தடுப்பு பாதுகாப்பதில் இந்த சாதனம் பயனற்றது. இந்த சாதனம் ஈபே மற்றும் பேஸ்புக் ஆகியவற்றால்  தடை செய்யப்பட்டுள்ளது. வியட்நாம்  மற்றும் தாய்லாந்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஹாங்காங் கடைவீதியில் ஒரு சாதனம் ஹெச்கே டாலர் 100-க்கு (இந்திய ரூபாயில் 974.20) விற்கப்படுகிறது’ என்றார். இதுகுறித்து ஹாங்காங் நாட்டு சுங்க மற்றும் கலால் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இது தவறான வர்த்தகம். ‘வைரஸ் ஷட் அவுட்’ குறித்து விசாரித்து வருகிறோம். சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக ஹாங்காங் டாலர் 5,00,000 அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்’ என்றனர். வைரஸ் தொற்றுக்கு மத்தியில் புதுசு புதுசாக கிளம்பும் போலி மருந்து, மாத்திரை, சாதனங்களால் மக்களின் உயிருடன் பலர் விளையாடி வருவது அறியாமையின் வெளிப்பாடாகவே உள்ளது.

மூலக்கதை