கொரோனாவில் இருந்து மீண்ட 103 வயது முதியவர்: தானேயை சேர்ந்தவர்

தினகரன்  தினகரன்
கொரோனாவில் இருந்து மீண்ட 103 வயது முதியவர்: தானேயை சேர்ந்தவர்

தானே: தானேயைச் சேர்ந்த 103 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டும் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள சித்தேஷ்வர் தலாவ்(குளம்) பகுதியைச் சேர்ந்த அந்த 103 வயது முதியவரும் அவரது 85 வயது தம்பியும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தானேயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு 103 வயது முதியவர் முழுமையாக குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து அந்த மருத்துவமனை டாக்டர் சமித் சொஹோனி கூறியதாவது;உலக நாடுகளில் ஸ்பானிஷ் புளூ வைரஸ் பரவிய ஓராண்டுக்கு முன்பு, அதாவது 1917ம் ஆண்டு பிறந்த 103 வயது முதியவரும் அவரது 85 வயது தம்பியும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூத்தவருக்கு 20 நாட்கள் ஐ.சி.யூ. வார்டில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு முறை அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டு முறையும் நெகடிவ் ரிசல்ட் வந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த முதியவர் இன்று(திங்கள் கிழமை) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது 85 வயது தம்பியின் உடல் நிலையும் தற்போது சீராக உள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை