ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி ஒதுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் அமைப்பு பிரதமருக்கு கடிதம்

தினகரன்  தினகரன்
ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி ஒதுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் அமைப்பு பிரதமருக்கு கடிதம்

பாட்னா: கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 16ம் தேதி முதல் நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இவை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் தனியார் பள்ளி, கல்லூரிகள் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் திணறி வருகின்றன. பீகார் மாநிலத்தின் பாட்னாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேசிய தனியார் பள்ளிகள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பில், நாடு முழுவதிலும் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இந்த அமைப்பின் தேசிய செயலாளர் சையது ஷமில் அகமது, தனியார் பள்ளிகள், ஆசிரியர்கள் அமைப்புகளின் மூலம் ஜூன் 30ம் தேதிக்குள் பிரதமருக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் 20 லட்சம் கடிதங்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடித‍த்தில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா ஊரடங்கினால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி இல்லாமல் திண்டாடி வருகின்றன. தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள், அலுவலக செலவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் கல்வி அமைப்புக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் மையத்தில் கடந்த 2012-13ல் அளிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், கடந்த 5 மாத ஊதியம் வழங்குவதற்கான நிதியை அரசு ஒதுக்கி தர கோருகிறோம். ஊதியம் தவிர பள்ளி கட்டிடத்துக்கான வாடகை, வங்கிக் கடனுக்கான இஎம்ஐ, பராமரிப்பு, மின்சாரம், தண்ணீர் வரிகள் ஆகியவற்றுக்கான நிதியையும் அளிக்க வேண்டுகிறோம்.இவ்வாறு அந்த கடித‍த்தில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை