பந்து, ஹாக்கி மட்டை உட்பட எல்லாமே இறக்குமதி விளையாட்டு சந்தையிலும் சீனாவின் ஆட்டம்தான்

தினகரன்  தினகரன்
பந்து, ஹாக்கி மட்டை உட்பட எல்லாமே இறக்குமதி விளையாட்டு சந்தையிலும் சீனாவின் ஆட்டம்தான்

*இந்தியா ஆதிக்கம் செலுத்துவது எப்போதுசீனாவின் ஆதிக்கம் வர்த்தக அமைச்சக புள்ளிவிவரப்படி 2018-19  நிதியாண்டில் இருந்து சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள்.சென்னை : மலிவு பொருட்களை களமிறக்கி, இந்தியாவின் பொருளாதாரத்துக்கு பல நெடுங்காலமாகவே வேட்டு வைத்து வருகிறது சீனா. அன்றாடம் நாம் பயன்படுத்தும் அத்தனை பொருட்களிலும் சீன ஆதிக்கம் தான். இதற்கு விளையாட்டு துறையும் விதிவிலக்கல்ல.  வர்த்தக அமைச்சக புள்ளி விவரப்படி, விளையாட்டுப் பொருட்கள் சந்தையில் பாதிக்கும் மேற்பட்ட பொருட்கள் சீனத் தயாரிப்பாகவே இருக்கின்றன.  டேபிள் டென்னிஸ் பந்து, ஷெட்டில் கார்க், பாட்மின்டன் மற்றும் டென்னிஸ் ராக்கெட்கள், ஈட்டி, உயரம் தாண்டுதலுக்கான தடுப்புகள், மலையேற்ற‌ உபகரணங்கள் உட்பட ஏராளமானவை சீனாவில் இருந்துதான் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.  2018 19 நிதியாண்டில் ₹130.31 கோடி அளவுக்கு பேட்மிட்டன் ராக்கெட்டுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் சீனாவில் இருந்து மட்டும் ₹42.7 கோடி மதிப்பில் இறக்குமதி ஆகியுள்ளது. இதுபோல் ₹18.57 கோடி மதிப்பிலான கால்பந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் சீனாவில் இருந்து ₹12.84 கோடி மதிப்பிலான கால்பந்து இறக்குமதியாகி உள்ளது. இந்தியாவில் விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் தரப்பில் கூறுகையில், ‘’உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அரசு கூறி வருகிறது. ஆனால் நடைமுறை வேறாக இருக்கிறது. சந்தையை சீனப் பொருட்கள் ஆக்கிரமித்துள்ளன. விளையாட்டுப் பொருட்கள் விற்பனை சந்தையில் இந்தியாவில் 50% சீனப் பொருட்கள் தான் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை மலிவாகவும் உள்ளதால், எங்கள் தயாரிப்பை தக்கவைத்துக்கொள்வது சவாலானதாக உள்ளது’’ என தெரிவித்தது. பந்து விற்பனையில் சீன நிறுவனங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்திய பாக்ஸின் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘’குத்துச்சண்டை வீரர்கள் பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் உபகரணங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவையெல்லாமே சீன இறக்குமதி தான் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டுப் போட்டிகளில் இந்தியத் தயாரிப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஆனால் சர்வதேச போட்டிகளில் இவற்றுக்கு அங்கீகாரம் இல்லை. எனவே வேறு வழியின்றி அதற்கான பயிற்சிகளில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்த உதாரணங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது’’ என்றார். கடந்த 2018-19 நிதியாண்டில் குத்துச்சண்டை போட்டிக்கான உபகரணங்கள் ₹3 கோடி மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் ₹1.38 கோடி சீனாவில் இருந்து வந்துள்ளது. இதுபோல், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மெஷினில் தைத்து தயாரிக்கப்பட்ட கால்பந்து அனைத்துமே சீனாவில் இப்போது செய்யப்பட்டதாக உள்ளது. மலிவு விலை என்ற ஒரே காரணத்திற்காக சீன பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இதுவே இந்திய உற்பத்தித் துறைக்கு மிகப் பெரிய பின்னடைவாகவும் பாதிப்பாகவும்  அமைந்து விட்டது. இதே நிலை நீடித்தால் இந்திய தயாரிப்பு எப்படி அங்கீகாரம் கிடைக்கும்? இந்த நிலை மாறுவது எப்போது என விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தி செய்வோர் வேதனை தெரிவிக்கின்றனர்.ஏற்றுமதியில் கூட தற்சார்பு இல்லை கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து ரக்பி பந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘’பந்து உற்பத்திக்காக பாலியூரிதின் மற்றும் எத்திலீன் வினைல் அசிட்டேட் ஆகியவற்றை சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம். இந்தியாவிலும் பங்கு உற்பத்திக்கான மூலப்பொருட்கள் உள்ளன. அவை சீனாவில் இருந்து வரும் மூலப்பொருட்களை விட தரம் குறைவாகவே இருக்கிறது. நாங்கள் இந்த உற்பத்தி பொருட்களை இந்தியா மட்டுமின்றி ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அனுப்புகிறோம். அதோடு சீன மூலப்பொருட்கள் விலை குறைவாக இருக்கின்றன. எனவே, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கூட சீன மூலப் பொருட்களை தான் பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது. அதுமட்டுமின்றி, ஏராளமான இந்திய ஜிம்களில் உள்ள உபகரணங்கள், ட்ராக் ஷூட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை’’, என்றார்.

மூலக்கதை