முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு ராஜஸ்தானில் நாளை முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு

தினகரன்  தினகரன்
முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு ராஜஸ்தானில் நாளை முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை முதல் மத வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் ஞாயிற்றுகிழமை நிலவரப்படி கொரோனாவால் 17,721 பேர் பாதித்துள்ளனர். இதுவரை 399 பேர் இறந்துள்ளனர். அங்குள்ள மத வழிபாட்டு தலங்கள் ஜூன் 30ம் தேதி வரை திறக்கப்படாது என்று கடந்த மாதம் 31ம் தேதி அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், அங்கு கிராம புறங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கிராம புறங்களில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. கிராம புறங்களில் சாதாரண நாட்களில் 50 பக்தர்கள் மட்டுமே வந்து செல்லும் சிறிய வழிபாட்டு தலங்கள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன. அதே நேரம், நகரங்கள், கிராமப்புறங்களில் உள்ள பெரிய மத வழிபாட்டு தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். முக‍க்கவசம் அணிதல், கிருமிநாசினி, சமூக இடைவெளி உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து விதிமுறைகளும் கடுமையாக பின்பற்றப்பட உள்ளது.

மூலக்கதை