59 சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி

தினமலர்  தினமலர்
59 சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி

புதுடில்லி : 'டிக் டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர்' உள்ளிட்ட, 59 சீன செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த, 15ம் தேதி, சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள், 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த மோதலைத் தொடர்ந்து இருநாட்டு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே, இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ள சீன செயலிகளுக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசிடம், உளவு அமைப்புகள் பரிந்துரைத்தன. இது தொடர்பாக, பலகட்ட ஆலோசனைகள் நடந்தன. இந்நிலையில், 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று இரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, 'டிக் டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர், கிளாஷ் ஆப் கிங்ஸ், டி.யூ., பேட்டரி சேவர், ஹெலோ, யூகேம் மேக்கப், எம்.ஐ., கம்யூனிட்டி, சி.எம்., பிரவுசர், வைரஸ் கிளீனர், பியூட்டி பிளஸ், வீ சாட், எக்ஸெண்டர், செல்பி சிட்டி, வீ சின்க், விவா வீடியோ, டி.யூ., ரெக்கார்டர், கேம் ஸ்கேன்னர், கிளீன் மாஸ்டர்' உள்ளிட்ட, 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின், 130 கோடி மக்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு குறித்து, சமீப காலமாக கவலைகள் தெரிவிக்கப்பட்டன. சில, 'மொபைல் போன்' செயலிகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் தரவுகள் திருடப்படுவதாகவும், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சத்திற்கு, பல புகார்கள் வந்தன.

இந்தியாவுக்கு வெளியே உள்ள, 'சர்வர்'கள் மூலம், இந்த சட்டவிரோத முயற்சிகள் நடந்து வந்தது தெரிய வந்தது. இது, நாட்டின் பாதுகாப்பிற்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதால், உடனடி நடவடிக்கைகள் இதில் தேவைப்பட்டன. அதை கருத்தில் கொண்டு, 59 செயலிகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை