தாகத்துக்காக தண்ணீர் குடிக்க வந்த குரங்குகளை மரத்தில் கட்டி தொங்கவிட்டு நாய்களை கடிக்க வைத்து கொடூரக்கொலை: வைரலாகும் வீடியோ

தினகரன்  தினகரன்
தாகத்துக்காக தண்ணீர் குடிக்க வந்த குரங்குகளை மரத்தில் கட்டி தொங்கவிட்டு நாய்களை கடிக்க வைத்து கொடூரக்கொலை: வைரலாகும் வீடியோ

திருமலை:  தெலங்கானாவின் கம்மம் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரராவ். இவரது வீட்டில் குடிநீர் தொட்டி உள்ளது. இத்தொட்டியில் உள்ள தண்ணீரை அங்கு வந்த குரங்கு ஒன்று  குடித்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த குரங்கு, தொட்டிக்குள் விழுந்து தத்தளித்தது. இதைக்கண்டு ஆத்திரமடைந்த வெங்கடேஸ்வரராவ், குரங்கை காப்பாற்றாமல் சரமாரி யாக அடித்துள்ளார். மேலும், குரங்கை பிடித்து அங்குள்ள மரத்தில் கயிறால் கட்டி தொங்கவிட்டுள்ளார்.  மேலும், தனது வளர்ப்பு நாய்களை விட்டு கடிக்க வைத்துள்ளார். இதில், அந்த குரங்கு துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. பின்னர்  குரங்கின் உடலை, அங்கு சுற்றித்திரிந்த நாய்களுக்கு இரையாக வீசியுள்ளார். அப்போது, அங்கு கூட்டமாக திரண்ட குரங்குகள், இறந்த குரங்கின் உடலை சுற்றி நின்றுக்கொண்டு, நாய்கள் நெருங்காதவாறு பாதுகாத்தது. இந்நிலையில், வெங்கடேஸ்வரராவ் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜோசப்ராவ் என்பவர், குரங்குகளின் கண்முன்னே மற்றொரு குரங்கை கொன்றால், மற்ற குரங்குகள் இங்கு இருக்காமல் ஓடிவிடும் என்றாராம். இதனால், வெங்கடேஸ்வர ராவ், ஜோசப்ராஜ்  ஆகியோர் மற்றொரு குரங்கை பிடித்து மரத்தில் கட்டி போட்டு கொன்றுள்ளனர். மேலும், இந்த செயல்களை வீடியோவில் பதிவு செய்து சமூகவலைதளத்திலும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை