எல்லை பிரச்னை எதிரொலி பீகாரில் சீன நிறுவனத்துடனான பாலம் அமைக்கும் ஒப்பந்தம் ரத்து: மத்திய அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
எல்லை பிரச்னை எதிரொலி பீகாரில் சீன நிறுவனத்துடனான பாலம் அமைக்கும் ஒப்பந்தம் ரத்து: மத்திய அரசு உத்தரவு

பாட்னா: பீகார் மாநிலத்தில் கங்கை ந‍தியின் மேல் பாலம் கட்டும் பணியில் சீன நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பீகார் மாநிலத்தில், தலைநகர் பாட்னா, சரண் மற்றும் வைசாலி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், கங்கை ந‍தியில், மகாத்மா காந்தி பாலத்துக்கு அருகில் 5.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம், அதன் கீழே வாகனங்கள் செல்வதற்கான 4 சிறிய பாலங்கள், ஒரு ரயில் மேம்பாலம், அங்கிருந்து சாலைக்கு செல்வதற்கான 1.58 கிலோ மீட்டர் தூர பாலம், 5 பேருந்து நிலையங்கள், 13 முக்கிய சாலைகள் சந்திப்பு உள்ளிட்டவற்றை கட்டுவதற்கு ரூ 2,900 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்த உரிமம் வழங்கப்பட்டது.இதற்கான ஒப்புதல் கடந்த 2019 டிசம்பரில் பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டது. இந்த திட்டம் மூன்றரை ஆண்டுகளில், அதாவது 2023 ஜனவரியில் முடிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பீகார் மாநில அரசின் முக்கிய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ``இந்த பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள நான்கு ஒப்பந்த‍தார‍ர்களில் இரண்டு நிறுவனங்கள் சீனாவை சேர்ந்தவை. அதனால் இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். பின்புலத்தில், லடாக் எல்லையில் 20 இந்திய வீர‍ர்களை சீனா சுட்டு கொன்றதற்கும், இந்தியாவுடன் தொடர்ந்து எல்லை பிரச்னையில் ஈடுபடுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

மூலக்கதை