விளையாட்டில் இனவெறியும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்... ஜேசன் ஹோல்டர் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
விளையாட்டில் இனவெறியும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்... ஜேசன் ஹோல்டர் வலியுறுத்தல்

மான்செஸ்டர்: விளையாட்டில் ஊக்கமருந்து, சூதாட்டம், ஊழல் விவகாரங்களில் சிக்கியவர்களை தண்டிப்பது போல் இனவெறி காட்டும் வீரர்களையும் கடுமையாக தண்டிக்க  வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு, வெள்ளைக்கார போலீஸ்காரரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு உலகம் முழுவதும் இனவெறிக்கு எதிரான எழுச்சி அதிகரித்து வருகிறது. விளையாட்டு வீரர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டேரன் சம்மி, கிறிஸ் கேல் உட்பட பலர் தாங்கள் களத்தில் இனவெறிக்கு ஆளானாதாக வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹோல்டர் இது குறித்து கூறியதாவது: இனவெறிக்கு எதிராக எங்கள் குரலையும் எதிரொலிக்கும் வகையில், அதற்கான இயக்கத்திற்கு எங்கள் ஒற்றுமையை தெரிவிக்க உள்ளோம். அதனை சவுத்தாம்டன் நகரில் ஜூலை 8ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்டின்போது வெளிப்படுத்துவோம். விளையாட்டு வீரர்கள் யாராவது இனவெறியுடன் நடந்து கொண்டால், பேசினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊக்கமருந்து, ஊழல், சூதாட்ட விவகாரங்களில் சிக்கும் வீரர்கள் மீது எடுப்பது போன்று உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம். ஏனென்றால் ஊக்கமருந்து பயன்படுத்துவது, ஊழல் செய்வது  போன்று இனவெறியும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்தான். இதில் நாம் அலட்சியம் காட்டக் கூடாது. இதுகுறித்து அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நமது விளையாட்டில் எங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் எங்களை சமமாகக் கையாள வேண்டும். நான் இதுவரை இனவெறிக்கு ஆளானதில்லை. ஆனால் நிறைய கேட்டும், பார்த்தும் இருக்கிறேன். அதற்கு எதிராக நாம் ஏதாவது செய்துதான் ஆக வேண்டும். இவ்வாறு ஹோல்டர் கூறியுள்ளார்.விதி இருக்குஐசிசி விதிகளின் படி களத்தில் இனவெறியுடன் நடந்துகொள்ளும் வீரர்களுக்கு முதலில் தரப்புள்ளிகள் குறைப்பு, 2வது முறையாக தவறு செய்தால் தரப்புள்ளி குறைப்பு மற்றும் போட்டிகளில் இருந்து இடைநீக்கம், தொடர்ந்து 3வது முறையாக தவறிழைத்தது உறுதியானால் அவர்களுக்கு ஆயுட்கால தடையும் விதிக்கலாம். ஆனால் இதுவரை எந்த வீரரும் இப்படி ஆயுட்கால தடைக்கு ஆளானது கிடையாது.

மூலக்கதை