புடின் பதவி நீட்டிப்புக்கு ஓட்டளித்த மக்கள்

தினமலர்  தினமலர்
புடின் பதவி நீட்டிப்புக்கு ஓட்டளித்த மக்கள்

டோனட்ஸ்க்; ரஷ்ய அதிபர் பதவியில், 2036 வரை நீடிக்கும் வகையில், விளாதிமீர் புடின் கொண்டு வந்துள்ள அரசியல் சாசன திருத்தத்துக்கு ஆதரவாக, கிழக்கு உக்ரைனைச் சேர்ந்தவர்கள் ஓட்டளித்து வருகின்றனர்.


கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, பிரதமர், அதிபர் பதவியில் உள்ள, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புடினின், 67, பதவிக் காலம், 2024ல் முடிகிறது. மேலும், 12 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்கும் வகையில், அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதாக, இந்தாண்டு ஜனவரியில் அவர் அறிவித்தார். அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதற்காக, ரஷ்ய மக்கள் கடந்த சில நாட்களாக ஓட்டளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்யாவை ஒட்டியுள்ள, உக்ரைனின் கிழக்கு பகுதி, பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியை, லுஹான்ஸ்க் மற்றும் டோனட்ஸ்க் என்ற தனி நாடாக அறிவித்து செயல்பட்டு வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த, 2.20 லட்சம் பேருக்கு, ரஷ்ய பாஸ்போர்ட் வழங்க, புடின் உத்தரவிட்டார்.தற்போது நடந்து வரும் ஓட்டெடுப்பில், இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் ஓட்டளிக்க ஆர்வம் தெரிவித்தனர்.


அதன்படி, ரஷ்ய எல்லையில் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. டோனட்ஸ்க் பகுதியில் இருந்து, பஸ்கள் மூலம் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு, ஓட்டளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 'தங்களுக்கு தன்னாட்சி அளிக்க வேண்டும் அல்லது சீனாவுடன் இணைக்க வேண்டும்' என, இந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். புடினின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுவதால், இதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று இந்தப் பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துஉள்ளனர்.

மூலக்கதை