சிறுபான்மையின பெண்களுக்கு சீனாவில் கட்டாய கருத்தடை

தினமலர்  தினமலர்
சிறுபான்மையின பெண்களுக்கு சீனாவில் கட்டாய கருத்தடை

பீஜிங்; அண்டை நாடான சீனாவில், சிறுபான்மை மக்கள் தொகையை குறைக்கும் வகையில், உய்கர் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு, கட்டாய கருத்தடை செய்யும் நடவடிக்கைகளை, அதிகாரிகள் தீவிரப் படுத்தியுள்ளனர்.

முத்திரைசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் மொழி பேசுவோர் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் உய்கர் முஸ்லிம்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள், சீனாவில் சிறுபான்மையினராக கருதப்படுகின்றனர்.இவர்களைத் தவிர, வேறு சில சிறுபான்மை இனத்தவரும், இந்த மாகாணத்தில் வசிக்கின்றனர். இந்த சிறுபான்மையினரின் மக்கள் தொகையை குறைப்பதற்கான முயற்சியில், சீன அரசு, கடந்த சில ஆண்டுகளாகவே, தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

உய்கர் மக்களில் பலரை, பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி, தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். மேலும், சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு, சீன அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று அதிரடிச் சோதனையும் நடத்தி வருகின்றனர்.எந்த வீட்டிலாவது இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு செலுத்த முடியாத அளவுக்கு அபராதம் விதிக்கின்றனர். அபராதம் செலுத்தாதவர்களை வலுக்கட்டாயமாக தடுப்பு முகாம்களில் அடைக்கின்றனர். நடவடிக்கைமேலும், திருமணமான சிறுபான்மையின பெண்கள் கர்ப்பமானால், அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.அந்த பெண்களுக்கு கருத்தடை சாதனங்களை பொருத்துவது, மருந்து, மாத்திரை கொடுத்து கருகலைப்பது போன்ற கொடூரமான நடவடிக்கைகளிலும் சீன அதிகாரிகள் ஈடுபடுவதாக, தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து உய்கர் மக்கள் கூறுகையில், 'மூன்று குழந்தைகள் வரை பெறுவதற்கு எங்களுக்கு சீன சட்டம் அனுமதி அளித்துள்ளது. 'ஆனால், அதிகாரிகள் அதை பொருட்படுத்தாமல், எங்கள் மக்கள் தொகையை குறைப்பதில் தான் கண்ணாக இருக்கின்றனர்' என்கின்றனர். சீன அதிகாரிகள் தரப்பில், 'ஜின்ஜியாங் மாகாணத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதால், வறுமையும், பழமைவாதமும் அதிகரிக்கிறது; இந்த அபாயகரமான போக்கை தடுக்கவே கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன' என்கின்றனர்.

மூலக்கதை