ரஷ்யா சதி செய்ததா: 'பொய்' என்கிறார் டிரம்ப்

தினமலர்  தினமலர்
ரஷ்யா சதி செய்ததா: பொய் என்கிறார் டிரம்ப்

வாஷிங்டன்; ''ஆப்கானிஸ்தானில், அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு, தலிபான் பயங்கரவாதிகளுக்கு ரஷ்யா நிதி உதவி அளித்தது தொடர்பாக, எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை,'' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ''இது ஒரு பொய் செய்தி,'' என, அவர் கூறியுள்ளார்.


ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், அமெரிக்க படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக, படைகளை விலக்கி கொள்ள அமெரிக்கா முன் வந்துள்ளது.இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தும்படி, அங்குள்ள தலிபான் பயங்கரவாதிகளுக்கு, ரஷ்யா பெரும் நிதி உதவி அளித்துள்ளதாக, செய்திகள் வெளியாயின. அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'நியூயார்க் டைம்ஸ்' உள்ளிட்ட பத்திரிகைகள் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளன. மேலும், இந்த விவகாரம் குறித்து, அதிபர், டொனால்டு டிரம்புக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, டொனால்டு டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:தலிபான்களுக்கு, ரஷ்யா நிதி உதவி அளித்தது தொடர்பாக, என்னிடம் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. இந்த குற்றச்சாட்டை அனைத்து தரப்பினரும் மறுத்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில், நம் படைகள் மீது எந்த தாக்குதலும் இதுவரை நடக்கவில்லை. பொய் செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள, மற்றொரு பொய் செய்தி இதுவாகும். அதில் கூறப்பட்டுள்ளது போல் எதுவும் நடக்கவில்லை.ரஷ்யா மீது என்னுடைய அரசை போல எந்த அமெரிக்க அரசும் கண்டிப்புடன் நடந்து கொண்டதில்லை. ரஷ்யா தாக்குதல் நடத்த சதி செய்தது தொடர்பாக ஏதாவது ஆதாரம் இருந்தால், அதை அந்த பத்திரிகைகள் வெளியிடுமா.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை