விண்டீஸ் வீரர்களுக்கு ‘ஸ்பெஷல்’ அனுமதி | ஜூன் 29, 2020

தினமலர்  தினமலர்
விண்டீஸ் வீரர்களுக்கு ‘ஸ்பெஷல்’ அனுமதி | ஜூன் 29, 2020

 லண்டன்: இங்கிலாந்து தொடரில் இனவெறிக்கு எதிரான வாசகத்தை, தங்கள் ‘ஜெர்சியில்’ பொறித்து விளையாடுகின்றனர் விண்டீஸ் வீரர்கள்.

அமெரிக்காவில் கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு, போலீசாரால் கொல்லப்பட்டார். இதையடுத்து இனவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் திரண்டு எழுந்தனர். இங்கிலாந்தில் நடக்கும் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் பங்கேற்கும் வீரர்கள், இனவெறிக்கு எதிரான ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ (‘கறுப்பினர் வாழ்க்கையும் முக்கியம்’) என்ற வாசகம் பொறித்த ‘ஜெர்சி’ அணிந்து விளையாடுகின்றனர்.

தற்போது வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விண்டீஸ் வீரர்களும் இதுபோன்ற வாசகம் உள்ள ‘ஜெர்சி’ அணிந்து விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி வழங்கியது. இதுகுறித்து விண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறுகையில்,‘‘கிரிக்கெட், விண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு மற்றும் விளையாட்டு வரலாற்றில் மிக முக்கிய தருணம் இது. இனவெறி பிரச்னையில் எங்கள் ஒற்றுமை காண்பிப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது எங்கள் கடமை என நாங்கள் நம்புகிறோம். எங்கள் சம உரிமைக்காக பல வழிகளில் போராடுகிறோம். எங்கள் நிறத்தை வைத்து வேறுபாடு பார்க்கக்கூடாது. மக்கள் இந்த எண்ணத்தை களையும் வரை எங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்,’’ என்றார்.

பயிற்சி பாதிப்பு

இங்கிலாந்து, விண்டீஸ் மோதும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 8ம் தேதி ஓல்டு டிரபோர்டில் துவங்குகிறது. இதற்காக விண்டீஸ் அணியினர் நேற்று நான்கு நாள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்க இருந்தனர். மழை காரணமாக முதல் நாள் போட்டி பாதிக்கப்பட்டது.

மூலக்கதை