ஜூலை 1 முதல் நாடு திரும்பலாம்; ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி: பாகிஸ்தானுக்கு தடை

தினமலர்  தினமலர்
ஜூலை 1 முதல் நாடு திரும்பலாம்; ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி: பாகிஸ்தானுக்கு தடை

அபுதாபி: 'கொரோனாவால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஐக்கிய அரபு அமீரக நாட்டினர், ஜூலை 1ம் தேதி முதல் நாடு திரும்பலாம்' எனத் தெரிவித்துள்ள, அந்நாட்டின் தேசிய அவரச நிலை மற்றும் பேரழிவு மேலாண்மை ஆணையம், பயணம் செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.


வழிமுறைகள் என்ன?


* விமானம் கிளம்புவதற்கு 72 மணி நேரத்துக்கு முன், பயணிகள் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும். அதில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்ற முடிவு வந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
* ஐக்கிய அரபு அமீரகத்தால் பரிந்துரைக்கப்பட்ட, 17 நாடுகளில், 106 நகரங்களில் உள்ள பரிசோதனை மையங்களில் மட்டுமே பயணிகள் பரிசோதனை செய்ய வேண்டும்.
* பரிந்துரைக்கப்பட்ட பரிசோதனை மையங்கள் இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்த உடன், பரிசோதனைக்கு உட்படுத்தப்பவர்; 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
* பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் செலவுகளை சம்பந்தபட்ட நபர்களே முழுமையாக ஏற்க வேண்டும். அதே போல், வெளி நாடுகளில் உள்ள தங்களது பணியாளர்களை திரும்ப அழைத்துக்கொள்ளும் நிறுவனங்கள், இந்த செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* தனிமைப்படுத்தப்படும் பயணிகளை அரசு ஊழியர்கள் கண்காணிக்க, ஐக்கிய அரபு அமீரக அரசு குறிப்பிடும் ஒரு செல்போன் செயலியையும் பயணிகள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
* இது குறித்த மேலதிக தகவல்களை smartservices.ica.gov.ae என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.
இது போன்ற வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


பாகிஸ்தானில் இருந்து வர தடை


'பாகிஸ்தானில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. ஐக்கிய அரபு அமீர அரசால் பரிந்துரைக்கப்படும் கொரோனா தொற்று பரிசோதனை மையம் பாகிஸ்தானில் கண்டறியப்படும் வரை இந்த தடை தொடரும்' என, ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவரச நிலை மற்றும் பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.



'பரிசோதனைகள் செய்யாமல் மக்களை அழைத்துவந்ததால் தான் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்தது. அதேபோல், போலியான சான்றிதழ்களுடன் பயணித்த சிலரால் கொரானா பரவல் வேகமெடுத்தது. ஐக்கிய அரபு அமீரகத்தால் பரிந்துரைக்கப்படும் மையத்தில் மட்டும் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதே நாட்டிற்குள் அனுமதிக்க முடியும் என்றும், அதுவும் அரசு பரிந்துரைக்கும் மையங்களில் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும் என, அறிவித்திருப்பது மற்றநாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது' என, வல்லநர்கள் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை