3வது திருமண சர்ச்சை : 'உங்க வேலைய பாருங்க' என லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடி

தினமலர்  தினமலர்
3வது திருமண சர்ச்சை : உங்க வேலைய பாருங்க என லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடி

நடிகை வனிதா விஜயகுமாரின் முதல் இரண்டு திருமணங்கள் தோல்வியில் முடிந்த நிலையில், மூன்று குழந்தைகள் உள்ள சூழலில் சனிக்கிழமை அன்று பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். மறுநாளே பீட்டர் பாலின் மனைவி ஹெலன், தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், தனக்கு விவாகரத்து கொடுக்காமலே பீட்டர் பால் இப்போது திருமணம் செய்ததாக சென்னை வட பழனி போலீசில் புகார் அளித்துள்ளார். இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தயார், இது எதிர்பார்த்த ஒன்று தான், தன்னிடம் ஒரு கோடி பணம் பறிக்கவே ஹெலன் இப்படி செய்துள்ளார் என்றார் வனிதா.

இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் டுவிட்டரில், ''பீட்டர் பாலுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர் இன்னும் விவாகரத்து பெறவில்லை. படித்தவர்களே எப்படி இந்த தவறை செய்கிறீர்கள். வனிதாவை திருமணம் செய்து முடிக்கும் வரை ஏன் பீட்டரின் முதல் மனைவி புகார் அளிக்கவில்லை, திருமணத்தை நிறுத்தவில்லை. வனிதா கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டவர். இந்த உறவாவது அவருக்கு நல்ல விதமாக அமையும் என நினைத்தேன். ஆனால் இந்த பிரச்னையை அவர் கவனிக்காதது வருத்தமளிக்கிறது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தை பெண்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் எதுவும் மாறப்போவதில்லை'' என பதிவிட்டார்.

இந்த பதிவை பார்த்து கோபமான வனிதா டுவிட்டரில், ''உங்கள் டுவீட்டை நீக்குங்கள். உங்க வேலையை மட்டும் பாருங்கள். இது பிக்பாஸ் நிகழ்ச்சியோ அல்லது குடும்பத்தை கெடுக்கும் உங்களின் நிகழ்ச்சியோ அல்ல. நான் படித்தவள். யாருடைய ஆதரவுமின்றி என் வாழ்க்கையை என்னால் பார்த்துக் கொள்ள முடியும். என் முடிவுகளுக்கு உங்களின் ஆதரவோ, அங்கீகாரமோ அவசியமில்லாதது. இதிலிருந்து தள்ளியே இருங்கள். இது ஒன்றும் பொது பிரச்னையோ அல்லது உங்களின் நிகழ்ச்சியோ கிடையாது'' என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை