ஊரடங்கு முடிந்ததும் மம்முட்டியின் சிபிஐ-5ஆம் பாகம் துவக்கம்

தினமலர்  தினமலர்
ஊரடங்கு முடிந்ததும் மம்முட்டியின் சிபிஐ5ஆம் பாகம் துவக்கம்

மலையாள சினிமாவில் மம்முட்டி வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்த படம் தான் 'ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு'. சொல்லப்போனால் இந்த படம்தான் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் மம்முட்டியை கொண்டு சேர்த்தது. 1988-ல் வெளியான இந்த படத்தை தொடர்ந்து சீரான இடைவெளிகளில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் ஜாக்ரதா, சேதுராம ஐயர் சிபிஐ, நேரறியான் சிபிஐ என மொத்தம் நான்கு பாகங்கள் இந்த 32 வருடங்களில் வெளியாகியுள்ளன.

இந்த நான்கு பாகங்களையும் இயக்கியவர் இயக்குனர் மது. தமிழில் மௌனம் சம்மதம் என்கிற படத்தை இயக்கியவர் இவர்தான். இந்த நான்கு பாகங்களுக்கும் கதை எழுதியவர் பிரபல சீனியர் கதாசிரியர் எஸ்.என்.சுவாமி., இந்தப்படத்தின் 5ஆம் பாகம் துவங்குவது பல வருடங்களாகவே தள்ளிப்போய்க் கொண்டிருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் படத்தின் தயாரிப்பு முன் பணிக்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் மதுவும் கதாசிரியர் எஸ்.என்.சுவாமியும் தெரிவித்தார்கள்.

இந்தநிலையில் ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியதும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறியுள்ளார் படத்தின் கதாசிரியர் எஸ்.என்.சுவாமி. அதுமட்டுமல்ல, இந்த ஐந்தாம் பாகம், முந்தைய நான்கு பாகங்களை விட த்ரில்லிங்காக இருக்கும் என்றும் இதுவரை மலையாளத்தில் வெளியான த்ரில்லர் படங்களில் மிக முக்கியமான படமாகவும் இது இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை