சிறிய படங்கள் புறக்கணிப்பு : வித்யுத் ஜம்வால் காட்டம்

தினமலர்  தினமலர்
சிறிய படங்கள் புறக்கணிப்பு : வித்யுத் ஜம்வால் காட்டம்

கொரோனா ஊரடங்கினால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி தளங்களில் பெரிய படங்களையும் நேரடியாக வெளியிடும் முறை அறிமுகமானது. அமேசான் நிறுவனம் மே மாதத்தில் 7 படங்களை வெளியிடுவதாக முதன் முதலில் அறிவித்து மூன்று படங்களை திரையிட்டும் முடித்துவிட்டது. மீதமுள்ள நான்கு படங்கள் அடுத்த வாரங்களில் வெளியாக உள்ளன.

அதே போன்று ஹாட்ஸ்டார் நிறுவனம் இன்று 7 ஹிந்திப் படங்களை வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. “தில் பேச்சரா, லட்சுமி பாம், புஜ், சடக் 2, தி புக் புல், குதாபிஸ், லூட் கேஸ்” ஆகிய 7 படங்கள் ஜுலை முதல் அக்டோபர் வரை வெளியாக உள்ளன.

அதற்காக இன்று மாலை நேரடி ஒளிபரப்பு ஒன்றை நடத்தியது. அந்த 7 படங்களில் 7 படங்களின் நடிகர்கள், நடிகைகளை மட்டுமே அழைத்திருந்தது. அக்ஷய்குமார், அஜய் தேவகன், ஆலியா பட், அபிஷேக் பச்சன், வருண் தவான் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொள்ள 'குதாபிஸ்' படத்தின் நாயகன் வித்யுத் ஜமாலுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. 'தில் பேச்சரா' படத்தின் நாயகன் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை புறக்கணித்தது பற்றி வித்யுத், “நிச்சயம் பெரிய அறிவிப்புதான். 7 படங்களை வெளியிட உள்ள நிலையில் 5 படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். 2 படங்களுக்கு அழைப்பும் இல்லை, தகவலும் இல்லை” என காட்டமாக டுவீட் செய்துள்ளார்.

இம்மாதிரியான புறக்கணிப்புகளால் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதாக ரசிகர்கள் பலரும் குற்றம்சாட்டிய நிலையில் அதே போன்றதொரு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. அது குறித்து புறக்கணிக்கப்பட்ட நடிகர் ஒருவர் குற்றம் சாட்டியிருப்பது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வித்யுத் ஜமாவல் அஜித் நடித்த 'பில்லா 2', விஜய் நடித்த 'துப்பாக்கி', சூர்யா நடித்த 'அஞ்சான்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

மூலக்கதை