பூர்ணா விவகாரத்தில் பிரபல காமெடி நடிகருக்கு சம்மன்

தினமலர்  தினமலர்
பூர்ணா விவகாரத்தில் பிரபல காமெடி நடிகருக்கு சம்மன்

நடிகை பூர்ணா திருமணம் குறித்து அவரது வீட்டாருடன் சம்பந்தம் பேசுவதாக கூறி மோசடி செய்ய முயற்சித்த மோசடி கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்து. இதில் ஈடுபட்ட நபர்கள் மீது பூர்ணாவின் தாயார் கொடுத்த புகாரை தொடர்ந்து, தற்போது இன்னும் ஏழு பெண்கள் இதே நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸ் விசாரணையில் மேக்கப் கலைஞரான ஹரீஷ் என்பவர், பூர்ணா குடும்பத்தாருக்கும் மோசடி கும்பலுக்கும் அறிமுகம் ஏற்படுத்தி வைத்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த ஒப்பனை கலைஞர் ஹரீஷ், பூர்ணா மற்றும் மியா உள்ளிட்ட ஒரு சில நடிகைகளின் அலைபேசி எண்களை அவரது நட்பு வட்டாரத்தில் இருக்கும் பிரபல காமெடி நடிகரான தர்மஜன் போல்காட்டி என்பவரிடம் இருந்து தான் வாங்கினார் என்கிற விபரம் தெரியவந்துள்ளது. ஹரீஷின் அலைபேசியில் தர்மஜன் போல்காட்டியின் மொபைல் எண் இருந்ததையும் உறுதி செய்த போலீஸார், அவரை நேரில் ஆஜராகும்படி கூறி சம்மன் அனுப்பியுள்ளனர்.

நடிகர் தர்மஜன் போல்காட்டி கடந்த இரண்டு வருடங்களாக மலையாள திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகர் ஆவார். இதுகுறித்து அவர் கூறும்போது, தனக்கும் இந்த மோசடி கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தனது மொபைல் நம்பரை ஷாஜி பட்டக்கரா என்கிற ஒரு புரொடக்சன் மேனேஜரிடம் இருந்துதான் அவர்கள் வாங்கியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

தர்மஜனிடம் போலீஸ் நடத்தும் விசாரணையில் மேலும் பல விபரங்கள் தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை