கடத்தப்பட்ட அரிய பொக்கிஷங்கள் நைஜீரியாவில் ஏலம்? உண்மை என்ன?

தினமலர்  தினமலர்
கடத்தப்பட்ட அரிய பொக்கிஷங்கள் நைஜீரியாவில் ஏலம்? உண்மை என்ன?

அபுஜா: நைஜீரியாவில் நடந்த ஓர் ஏலம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. 'ஹாட்ஸ் ஆப் ஆப்பிரிக்கா போஸ்னியா அண்ட் நார்த் அமெரிக்கா' என்ற ஒரு நிறுவனம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய பழம் பொருட்களை ஏலம்விட இருந்தது. நைஜீரிய போரின்போது திருடப்பட்ட பழம்பொருட்கள் இந்த நிறுவனத்தால் தற்போது சட்டவிரோதமாக ஏலம் விடப்படுகின்றன என குற்றம்சாட்டப்படுகிறது.


ஆப்பிரிக்க நாடான நைஜீரியா பிரிட்டன் காலனி ஆட்சியின்போது இந்த பழம்பொருட்கள் திருடப்பட்டன. இந்த ஏல நிறுவனத்தின் நிறுவனர் கிறிஸ்டி இந்தக் குற்றச்சாட்டினை மறுத்துள்ளார். உரிய அனுமதிக்குப் பிறகே இந்தப் பழம்பொருட்கள் ஏலத்தில் விடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். நைஜீரியாவின் இக்போ பழங்குடி இனத்தின் சிற்பங்கள் இந்த நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் ஏலம் விடப்படுவதன் மூலம் கிறிஸ்டினின் நிறுவனம் 2 லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் லாபமீட்டும் எனப்படுகிறது.

நைஜீரியாவில் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின்போது திருடப்பட்ட சிற்பங்கள் மற்றும் அரிய ஓவியங்கள் தற்போது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும் என ஒரு சாரார் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் தனியார் ஏல நிறுவனங்கள் லாபத்துக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற அரிய சிற்பங்களை ஏலத்தில் விடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.


இந்தப் பழம்பொருட்கள் ஜாக்வஸ் கேகே என்ற பழம்பொருள் ஆராய்ச்சியாளர் சேகரித்தது எனவும், உரிய அங்கீகாரம் பெற்ற பின்னரே இவை ஏலத்தில் விடப்படுகின்றன எனவும் இந்த ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு ஜாக்வஸின் மரணத்திற்குப் பிறகு இந்த சிற்பங்கள் வேறு ஒரு தனியார் நிறுவனத்தால் வாங்கப்பட்டன. ஆனால் நைஜீரிய கலை வரலாற்று ஆராய்ச்சியாளர் சிக்கா ஒகேகே அகுலு கூறுகையில், இந்த சிற்பங்கள் 1967 முதல் 1970 வரை நடந்த நைஜீரிய சிவில் போரில் இக்போ பழங்குடி இன மக்களிடமிருந்து திருடப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த ஜூன் 6ஆம் தேதி இதுகுறித்து இட்ட இன்ஸ்டா பதிவு பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. இதனை அடுத்து கிறிஸ்டினின் ஏல நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பழம்பொருள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


உலகம் முழுவதும் பழம்பெரும் சிற்பங்கள் மற்றும் கலைப் பொருட்கள் சட்டவிரோதமாக திருடப்படும் அல்லது கடத்தப்படும். சில நிறுவனங்களால் பெரும் செல்வந்தர்களுக்கு இவை விற்கப்படுகின்றன. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது பல நாடுகளில் வந்தவண்ணமே உள்ளன. பழம்பொருள் ஏலத்தில் போலி சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு ஏலத்தில் ஏமாற்றி விற்கப்படுவதும் உண்டு. இவ்வாறு போலி பழம்பொருட்களை அசல் சிற்பம் போலவே அச்சுஅசலாக தயாரிக்க பலர் முயன்று வருகின்றனர்.

செல்வந்தர்கள் சிலர் பழம்பொருட்களை வாங்கி தங்களது கலக்ஷனில் வைக்க மிகுந்த ஆர்வம் காட்டுவர். எவ்வளவு விலை கொடுத்தாலும் சில அரிய பொக்கிஷங்கள் மற்றும் சிற்பங்களை மற்றவருக்கு விற்க மாட்டார்கள். இதுபோன்ற பழம் பொருட்களை சேகரிக்கும் பழக்கம்கொண்ட செல்வந்தர்களை குறிவைத்து பல நிறுவனங்கள் சட்டவிரோதமாக ஏலத்தை நடத்துகின்றன.

சில செல்வந்தர்கள் இந்த அரிய பொருட்களை வாங்கி அதிக விலைக்கு மற்ற ஏழு நிறுவனங்களுக்கு விற்கவும் முனைகின்றனர். இதனால் அவர்கள் பெரும் லாபம் ஈட்டுகின்றனர். இந்த சட்டவிரோத செயலுக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது என பழம்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சர்வதேச அளவில் கலைப் பொக்கிஷங்கள் மற்றும் பழம் பொருட்களை காக்க பல நாட்டு அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதனைத்தொடர்ந்து இந்த தொழில் சம்பந்தப்பட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள்மீது கடும் நடவடிக்கை பாய்கிறது. ஆனால் இதனால் சில அரசு அனுமதியுடன் செயல்படும் நல்ல நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை