கொரோனாவைத் தொடர்ந்து புயல்மழை; வெள்ளத்தில் தத்தளிக்கிறது சீனா

தினமலர்  தினமலர்
கொரோனாவைத் தொடர்ந்து புயல்மழை; வெள்ளத்தில் தத்தளிக்கிறது சீனா

பீஜிங்: சீனாவின் 26 மாகாணங்களில், கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சிச்சுவான் மாகாணத்தில் புயல் மழையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.கொரோனா வைரசால் மிகவும் கடுமையாக பாதிப்படைந்த சீனா, தற்போது தான் பாதிப்பிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தது. இந்நிலையில் தற்போது புயல் மழையால் சீனா மீண்டும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது; பல்வேறு மாகாணங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.


சீனாவின் 26 வெவ்வேறு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்மேற்குப் பகுதியான குவாங்கி மற்றும் சிச்சுவான் மாகாணத்தில் புயல் மழை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மழையால் அனைத்து மாகாணங்களிலும், 14 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளதாகவும், 7 லட்சம் மக்கள் பாதிப்படைந்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும்; 1 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும்; வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் மட்டும் 78 பேர் இறந்திருக்கலாம் எனவும் சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

'வெள்ளப்பெருக்கால் இதுவரை 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பொருள்சேதம் ஏற்பட்டிருக்கலாம்' என, அந்நாட்டின் அவசரநிலை மேலாண்மை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சீனாவின் ஜீவ நதிகளில் ஒன்றானா யாங்சே ஆற்றில் 1940க்கும் பிறகு இந்த ஆண்டு தான் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சோங்கிங் நகராட்சி தெரிவித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பருவகாலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், சீனா கடுமையாக பாதிப்படைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை