அடுத்தடுத்து கிராண்ட் ஸ்லாம் போட்டி அட்டவணை ரொம்ப மோசம்... நடால் அதிருப்தி

தினகரன்  தினகரன்
அடுத்தடுத்து கிராண்ட் ஸ்லாம் போட்டி அட்டவணை ரொம்ப மோசம்... நடால் அதிருப்தி

மாட்ரிட்: குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளை நடத்துவது வீரர்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக கடும் நெருக்கடியை உண்டாக்கும் என்று நட்சத்திர வீரர் ரபேல் நடால் அதிருப்தி தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல கிராண்ட் ஸ்லாம் போட்டியான யு.எஸ் ஓபன் ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட பிரெஞ்ச் ஓபன் செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடக்கும் என ஏடிபி அறிவித்துள்ளது. ‘இப்படி அடுத்தடுத்து கிராண்ட் ஸ்லாம் தொடர்களை நடத்துவது சரியல்ல. இதனால் வீரர்கள் உடல் மற்றும் மன ரீதியாக கடும் நெருக்கடிக்கு ஆளாவார்கள். குறிப்பாக, மூத்த வீரர்களுக்கு இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அட்டவணை தயாரிப்பில் ஏடிபி இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று ஸ்பெயின் நட்சத்திரம் நடால் தெரிவித்துள்ளார்.கடும் சவால்: ‘கடின மைதானங்களில் விளையாடிய உடனேயே களிமண் மைதானத்தில் விளையாட வேண்டிய கட்டாயம் என்பது மிகவும் சவாலானது. இதனால் வீரர்கள் காயம் அடைவதற்கான வாய்ப்பு மிக அதிகம். மேலும் குறைந்த அவகாசத்தில் அடுத்தடுத்து கிராண்ட் ஸ்லாம் போன்ற பெரிய போட்டிகளில் விளையாடுவது மிகவும் சிரமம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாட்களாக வீட்டில் முடங்கியிருக்கும் வீரர்கள் உடனடியாக முழுவீச்சில் களமிறங்குவது என்பதும் நடைமுறையில் சாத்தியமாக இருக்காது. யுஎஸ் ஓபன் கால் இறுதி, அரை இறுதி, பைனலில் விளையாடும் ஒரு வீரர், ஒரே வாரத்தில் பிரெஞ்ச் ஓபனில் விளையாட வேண்டும் என்பது மிகக் கொடுமையான தண்டனை’ என்று இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரேவும் தனது கவலையை பதிவு செய்துள்ளார்.

மூலக்கதை