இங்கிலாந்து அணியை வீழ்த்துவோம்: பாக்., கேப்டன் நம்பிக்கை | ஜூன் 28, 2020

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து அணியை வீழ்த்துவோம்: பாக்., கேப்டன் நம்பிக்கை | ஜூன் 28, 2020

கராச்சி: ‘‘இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம்,’’ என, பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் அணி, மூன்று டெஸ்ட் (ஆக. 5–9, 13–17, 21–25), மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ (ஆக. 28, 30, செப். 1) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக நேற்று, 20 வீரர்கள், 11 ஊழியர்கள் அடங்கிய பாகிஸ்தான் அணியினர் கராச்சியில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். ஐ.சி.சி., வழிகாட்டுதல்களின் படி முகக்கவசம் அணிந்திருந்த இவர்கள், சமூக இடைவெளியுடன் பயணம் செய்தனர்.

இத்தொடர் குறித்து பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் அசார் அலி கூறியது: இம்முறை இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு, பேட்டிங்கில் 300 அல்லது அதற்கு மேல் ரன் சேர்க்க வேண்டும். தவிர, சமீபத்திய தொடரில் எங்களது ‘பேட்டிங்’ சிறப்பாக இருந்தது. எங்களது பந்துவீச்சு வலுவான நிலையில் உள்ளது. இதனால் ஷாஹீன் ஷா அப்ரிதி, நசீம் ஷா போன்ற இளம் பவுலர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தருவர்.

பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதால் எவ்வித பாதிப்பும் இருக்க வாய்ப்பு இல்லை. இதற்கு பதிலாக வியர்வையை பயன்படுத்திக் கொள்வோம். இதேபோல ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் விளையாடுவதில் எங்களுக்கு எவ்வித பிரச்னையும் கிடையாது. கடந்த 10 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) இதுபோன்ற சூழ்நிலையில் விளையாடிய அனுபவம் உள்ளது.

இவ்வாறு அசார் அலி கூறினார்.

மூலக்கதை