‘பாக்சிங் டே’ டெஸ்டில் மாற்றம்: மார்க் டெய்லர் விருப்பம் | ஜூன் 28, 2020

தினமலர்  தினமலர்
‘பாக்சிங் டே’ டெஸ்டில் மாற்றம்: மார்க் டெய்லர் விருப்பம் | ஜூன் 28, 2020

மெல்போர்ன்: ‘‘இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்,’’ என, மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் 3வது டெஸ்ட், மெல்போர்னில் (டிச. 26–30) ‘பாக்சிங் டே’ போட்டியாக நடத்தப்படுகிறது. இப்போட்டியை மெல்போர்னில் நடத்துவதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. தவிர, சமீபகாலமாக இப்பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் டெய்லர் கூறியது: ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். ஏனெனில் கிறிஸ்துமஸ் நேரத்தில் மெல்போர்ன் மைதானத்திற்கு 20 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே வர வாய்ப்பு உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் போட்டியை மிகக் குறைந்த அளவிலான ரசிகர்கள் பார்ப்பது நன்றாக இருக்காது.

இப்போட்டியை பெர்த் அல்லது அடிலெய்டு மைதானத்தில் நடத்த வேண்டும். ஏனெனில் இம்மைதானங்களில் போட்டியை காண அதிக அளவில் ரசிகர்கள் வருவர். அடிலெய்டில் இந்திய அணிக்கு ரசிகர்கள் அதிகம். கடந்த 2015ல் அடிலெய்டில் நடந்த இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதிய உலக கோப்பை போட்டியை காண 52 நிமிடத்தில் ‘டிக்கெட்’ விற்றுத் தீர்ந்தன.

இவ்வாறு மார்க் டெய்லர் கூறினார்.

மூலக்கதை