சீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க லடாக் எல்லையில் நவீன ஏவுகணைகள் குவிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான் கைகோர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க லடாக் எல்லையில் நவீன ஏவுகணைகள் குவிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான் கைகோர்ப்பு

புதுடெல்லி: கடந்த 15ம் தேதி லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்டதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதற்றத்தால் கடந்த 22ம் தேதி இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், எல்லையில் இருந்து ஒரு கி. மீ. தொலைவுக்கு படைகளை வாபஸ் பெற சீன ராணுவம் ஒப்புக் கொண்டது.

எனினும் அண்மையில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப் படங்களில், சீன வீரர்கள் எல்லையில் முகாமிட்டிருப்பதும் ராணுவ தளவாடங்கள் குவிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. சீனாவின் ஆளில்லாத ‘ஏஆர்500சி’ ஹெலிகாப்டர்கள் எல்லையில் அடிக்கடி ரோந்து சுற்றி வருகின்றன.



அண்மையில் பாகிஸ்தான் உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது போல், சீன உளவு விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளன. அதற்கேற்றால் போல் கிழக்கு லடாக்எல்லையில் அதிநவீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் குவித்து வருகிறது.

ஸ்பைடர் எம்ஆர், பைதான்-5, டெர்பி, ஆகாஷ் ரக ஏவுகணைகள் எல்லையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இவை தரையில் இருந்து வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.

இதுகுறித்து விமானப்படை வட்டாரங்கள் கூறும்போது, ‘கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள அதிநவீன ஏவுகணைகள் மூலம் எதிரிகளின் உளவு விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகளை சில விநாடிகளில் தகர்க்க முடியும். எதிரிகளின் ஏவுகணைகள் எவ்வளவு வேகமாக வந்தாலும் இந்திய ஏவுகணைகள் துல்லியமாக இடைமறித்து தாக்கி அழிக்கும்.



லே விமானப்படைத் தளத்தில் சுகோய்-30எம்கேஐ உள்ளிட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தன. இதற்கிடையே கொரோனா வைரஸ் பிரச்னையால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் சீனாவுக்கு எதிராக  திரும்பியுள்ளன.

சீனாவில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள்  அந்நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவின் பக்கம் திரும்பி வருகின்றன. இதை தடுக்க இந்திய எல்லைகளில் சீன  ராணுவம் வேண்டுமென்றே போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் மீது ஏற்கனவே கடுப்பில் உள்ள அமெரிக்கா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் சீனக் கடல் பகுதிக்கு தனது கடற்படையின் 3 போர்க் கப்பல்களை அனுப்பி உள்ளது.

இதில் யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் போர்க்கப்பல், சீனாவின் அதிநவீன போர்க்கப்பலைவிட 3 மடங்கு பெரிதாகும்.

அமெரிக்க கடற்படையின் 8 நீர்மூழ்கிகளும் தென்சீனக் கடலில் ரகசியமாக ரோந்து சுற்றி வருகின்றன. மேலும் சென்காகு தீவு பிரச்னையால் ஜப்பான் ராணுவமும் சீனாவை குறிவைத்து ஏவுகணைகளை நிறுத்திவைத்துள்ளது.

அமெரிக்கா, ஜப்பானின் வியூகத்தால் சீன ராணுவத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

3,488 கி. மீ எல்லை
இந்திய பாதுகாப்பு மூத்த அரசாங்க அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், ‘‘சூழ்நிலையை சமாளிக்க ஆயுதப்படைகள் சுதந்திரமாக செயல்படுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. போதுமான துருப்புகள், ராணுவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் சீனாவுடனான 3,488 கி. மீ நீளமுள்ள சர்ச்சைக்குரிய எல்லையில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுநோய் சவாலை எதிர்கொண்ட போதிலும், எந்தவொரு சூழ்நிலைக்கும் பதிலளிக்க ஆயுதப்படைகள் போதுமான துருப்புக்களை நகர்த்தத் தொடங்கியுள்ளன’ என்றார்.

.

மூலக்கதை