பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் சுறுசுறுப்பு; பாஜக கூட்டணிதான் எங்கள் பிரதான எதிரி: மாஜி அமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் சுறுசுறுப்பு; பாஜக கூட்டணிதான் எங்கள் பிரதான எதிரி: மாஜி அமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி

பாட்னா: பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்து வரும் நிலையில், பாஜக கூட்டணிதான் எங்கள் பிரதான எதிரி என்று, மாஜி அமைச்சர் தலைமையில் புதிய கட்சிகள் சார்பில் கூட்டணி அமையவுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நவம்பர் மாத இறுதியில் முடிவடைகிறது.

அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு பின் இந்தியாவில் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது என்பதால் தேர்தல் ஆணையம் சில சலுகைகளை கொண்டு வந்துள்ளது.

இதுவரை 80 வயதுக்கு மேற்பட்டவர்களே தபால் ஓட்டு போட்டு வந்த நிலையில், தற்போது அந்த வயது வரம்பு 65 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று சந்தேகம் உள்ளவர்களும் தபால் ஓட்டு போட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த ஆயத்தமாகி வரும் நிலையில், ஆளும் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சியை அகற்ற, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. இன்றைய நிலையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையில் மற்றொரு அணியும் களம் இறங்குவது முடிவான ஒன்று.

இதற்கிடையே பீகார் தேர்தலுக்காக பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, சில உதிரி கட்சிகளை வளைத்து புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் கடந்த 15 நாட்களாக பாட்னாவில் தங்கி இருந்து ஆட்கள் திரட்டி வருகிறார்.



இதுகுறித்து யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், ‘பீகார் தேர்தலில் புதிய அணியை ஏற்படுத்திப் போட்டியிடுவோம். பாஜக கூட்டணிதான் எங்கள் பிரதான எதிரி.

பாஜக-வை வீழ்த்த விரும்புவோர் எங்கள் அணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம். புதிய அணியின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்’ என்றார்.

யஷ்வந்த் சின்ஹா பேட்டி அளித்த போது அவருடன் மூன்று முன்னாள் எம். பி-க்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரான அருண்குமார், தேர்தல் ஆணையத்தில் ‘பாரதிய சப்லோக்’ என்ற பெயரில் புதிய கட்சியைப் பதிவு செய்துள்ளார்.

அந்த பெயரில் சின்ஹா அணி, தேர்தலில் களம் இறங்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை