ஊக்கமருந்து சோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும்…: படகுப்போட்டி கூட்டமைப்பு கோரிக்கை

தினகரன்  தினகரன்
ஊக்கமருந்து சோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும்…: படகுப்போட்டி கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை: வீரர்களிடம்  மேற்கொள்ளப்படும்  ஊக்கமருந்து  சோதனை முடிவுகளை  உடனுக்குடன்  அறிவிக்க ‘நாடா’ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  இந்திய படகு போட்டி கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஸ்ரீராம்  கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய படகு போட்டி கூட்டமைப்புக்கு (ஆர்எப்ஐ) பிப்ரவரியில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் ஏப்ரலில் பொறுப்பேற்றுக் கொண்டனர். பொதுச் செயலாளராக  பொறுப்பேற்றுள்ள எம்.வி.ஸ்ரீராம் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர் ஆர்எப்ஐ, கொரோனா, ஊக்கமருந்து விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நம்மிடம் பேசியதில் இருந்து: மிகக் கடுமையான சூழலில் இருக்கிறோம். மீண்டும் போட்டிகளை நடத்த  அவசரப்படவில்லை.  வீரர்களுக்கு இடையில்  அதிக தொடர்பு இல்லாத விளையாட்டாக படகு போட்டி இருக்கிறது. ஆனால், குழு போட்டி அப்படியில்லை.  எனவே நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத சூழலில், மீண்டும் போட்டிகள் நடத்துவது குறித்து யோசிக்கப்படும்.ஒலிம்பிக் போட்டிக்கு முந்தைய ஆசிய அளவிலான தகுதிச் சுற்றுப் போட்டிக்காக நமது வீரர், வீராங்கனைகள் தயாராகி வந்தனர். தென் கொரியாவில்  ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த அந்தப் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டுமின்றி, கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேர்வாகி உள்ளவர்களும் கூட பயிற்சி பெற முடியாமல் இருக்கின்றனர். ஐதராபாத்தில் இளம் வீரர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் 32 பேர் பங்கேற்றனர். அவர்களில் 22பேர்  ஊக்க மருந்து பயன்படுத்தியதாக  இப்போது  முடிவுகள் வெளியாகி உள்ளது. முகாமில் இருந்த யாரும் வெளியில் செல்லவில்லை. முகாமில் தந்த உணவு, சத்து மாத்திரை, ஆயுர்வேத பொருட்கள் என அங்கீகரிக்கப்பட்ட சத்தான உணவுவகைகளைதான் சாப்பிட்டுள்ளனர். எனவே சத்து மாத்திரைகள் போன்ற ஊட்டச்சத்துகள் சாப்பிட்டதால் அவர்களின் ரத்த மாதிரிகளில் ஊக்கமருந்து  சாப்பிட்டதுபோல் தெரிந்திருக்கலாம் என்று நினைக்கிறோம். எனவே இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்.  அதன் ஒருபகுதியாக  தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (நாடா) உடன் இணைந்து செயல்பட உள்ளோம்.‘நாடா’ இன்னும் வேகமாக  செயல்பட  வேண்டும். ஐதராபாத் முகாம் கடந்த ஆண்டு நடந்தது. சோதனை மாதிரிகள் 2019 ஜூனில் எடுக்கப்பட்டது. முடிவுகள் 2020 மே மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இளம் வீரர்களாக  அந்த முகாமில் பங்கேற்ற பலர் இப்போது ஜூனியர் அணியில் இருந்து சீனியர் அணிக்கு மாறிவிட்டனர். ஆனால் முடிவு இப்போதுதான் வருகிறது.  இடையில் நாடா ஆய்வகத்தின்   தர அங்கீகாரத்தை   2019 செப்டம்பரில் உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை (வாடா) ரத்து செய்தது. எனவே சோதனை முடிவுகளை நாடா உடனுக்குடன்  வெளியிட்டால் காரணங்களைக்  கண்டறிய ஏதுவாக இருக்கும். படகு போட்டி  அதிகம் செலவழிக்க வேண்டிய விளையாட்டு.  அதனால் குறைந்த எண்ணிக்கையில்தான்  இந்த விளையாட்டில்  ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, அதிகளவில் வீரர்களை ஊக்குவிக்க முன்வர வேண்டும். கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். அலை, நீரோட்டமில்லாத 500மீட்டர் முதல் 1000மீட்டர் நீளத்திற்கு நீர்நிலைகள் பயிற்சி செய்ய தேவைப்படுகிறது. தமிழகத்தில் அடையாறு போட் கிளப், போரூரில் உள்ள தனியார் படகு குழாம்  ஆகியவற்றில்  பயிற்சி  செய்யலாம். கொடைக்கானலில் உள்ள ஏரியிலும் பயிற்சி பெற முடியும். அங்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவது உள்ளிட்ட சில பிரச்னைகள் உள்ளன. அதேபோல் மணிமுத்தாறு அணையிலும் பயிற்சி பெற முடியும் என்பதை  அங்குள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையினருக்கு  செய்து காட்டியுள்ளோம். அவர்கள் அந்த வசதியை பயன்படுத்த உள்ளனர்.இவ்வாறு ஸ்ரீராம் தெரிவித்தார்.

மூலக்கதை