இங்கிலாந்து செல்கிறது பாக்., | ஜூன் 27, 2020

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து செல்கிறது பாக்., | ஜூன் 27, 2020

இஸ்லாமாபாத்: கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி இன்று இங்கிலாந்து புறப்படுகிறது.

இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் அணி, 3 டெஸ்ட் (ஆக. 5–9, 13–17, 21–25), 3 சர்வதேச ‘டுவென்டி–20’ (ஆக. 28, 30, செப். 1) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐ.சி.சி., வெளியிட்ட வழிகாட்டுதலின் படி, போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 2 வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக பாகிஸ்தான் அணியினர், இன்று இங்கிலாந்துக்கு புறப்படுகின்றனர். வொர்செஸ்டருக்கு செல்லும் இவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர். அதன்பின் ஜூலை 13 முதல், டெர்பிஷயரில் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

சமீபத்தில் இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இவர்களை தவிர்த்து, மற்ற அனைவரும் இன்று இங்கிலாந்துக்கு புறப்படுகின்றனர்.

ஏற்கனவே பாதிக்கப்பட்ட 10 வீரர்களுக்கு நடத்தப்பட்ட 2வது பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. இருப்பினும் இவர்களுக்கு மீண்டும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தால் மட்டுமே இங்கிலாந்துக்கு அனுப்பப்படுவர். இதனையடுத்து கேப்டன் அசார் அலி, பாபர் ஆசம், சர்பராஸ் அகமது, ஷாஹீன் ஷா அப்ரிதி, சோகைல் கான் உட்பட 20 வீரர்கள், 11 பயிற்சியாளர் குழுவினர் இன்று இங்கிலாந்து புறப்படுகின்றனர்.

மூலக்கதை