சென்னைக்காரங்க என்னமா சிந்திக்கிறாங்க: டுபிளசி வியப்பு | ஜூன் 27, 2020

தினமலர்  தினமலர்
சென்னைக்காரங்க என்னமா சிந்திக்கிறாங்க: டுபிளசி வியப்பு | ஜூன் 27, 2020

ஜோகனஸ்பர்க்: ‘‘சென்னை அணியில் சிறப்பாக சிந்திக்க கூடிய வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். தன்னம்பிக்கையுடன் செயல்படுவதே வெற்றிக்கு காரணம்,’’என டுபிளசி தெரிவித்தார்.

ஐ.பி.எல்., தொடரின் வெற்றிகரமான அணியாக நம்ம சென்னை திகழ்கிறது. 2010, 2011ல் சாம்பியன் பட்டம் வென்றது. சூதாட்ட பிரச்னையால் இரண்டு ஆண்டு தடைக்கு பின் களமிறங்கிய 2018ல் கோப்பை வென்று சாதித்தது. அனைத்து தொடரிலும் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற பெருமைமிக்கது. 2010, 2014ல் சாம்பியன்ஸ் லீக் கோப்பை கைப்பற்றியது. இதற்கு தோனியின் ‘கூலான’ தலைமை முக்கிய காரணம். இந்த ஆண்டு கொரோனாவால், தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வீரர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

சென்னை அணிக்காக 5 ‘சீசன்’ விளையாடிய தென் ஆப்ரிக்காவின் டுபிளசி கூறியது:

சென்னை அணியின் ‘டிரஸ்சிங் ரூம்’ எப்போதும் அமைதியாக இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப சிந்திக்க கூடிய வீரர்கள் நிறைய பேர் இருப்பர். யாராவது ஒருவர் அணியை கரை சேர்த்து விடுவர் என்ற தன்னம்பிக்கை காணப்படும். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவர் ஜொலிப்பர். வெற்றிக்கான சுமையை அனைவரும் பகிர்ந்து கொள்வர். வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கை தான் சாதிக்க உதவுகிறது. சர் அலெக்ஸ் பெர்குசன் பயிற்சியில் கோப்பைகளாக வென்று குவித்த இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணியுடன் சென்னையை ஒப்பிடலாம். போட்டியின் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து வெற்றி பெறுவர். இதே போல எந்த சூழ்நிலையிலும் இருந்து மீண்டு வெற்றி பெறும் வல்லமை சென்னை அணிக்கு உண்டு.

இவ்வாறு டுபிளசி கூறினார்.

மூலக்கதை