பீகார், உத்தரபிரதேசத்தில் இடியுடன் மழை மின்னல் தாக்கி 110 பேர் பலி: பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பீகார், உத்தரபிரதேசத்தில் இடியுடன் மழை மின்னல் தாக்கி 110 பேர் பலி: பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்

பாட்னா: பீகார், உத்தரபிரதேசத்தில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்ததில் மின்னல் தாக்கி 110 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாக பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் இடியுடன்  கூடிய மழை மற்றும் மின்னல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டதிட்ட 110 பேர்  உயிரிழந்துள்ளனர். குறைந்தது 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாட்னாவில் பேரிடர்  மேலாண்மைத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, புதன்கிழமை  முதல் மின்னல் தாக்கி 83 பேர் உயிர் இழந்தனர். இந்த சம்பவங்களில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



பெரிய அளவில் சொத்துக்கள்  சேதமடைந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. பீகார் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் பயங்கர இடி,  மின்னல் தாக்கியதில் பலி அதிகமாகியுள்ளது.

கோபால்கஞ்சில் மட்டும்  அதிகபட்சமாக 13 பேர் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். நவாதா  மற்றும் மதுபானியில் தலா 8 பேரும், சிவான் மற்றும் பாகல்பூரில் தலா 6  பேரும், கிழக்கு சம்பரான், தார்பங்கா, பங்க்காவில் தலா 5 பேரும், ககாரியா மற்றும் அவுரங்காபாத்தில் தலா 3 பேரும், மேற்கு சம்பரான், கிஷன்கஞ்ச்,  ஜெஹனாபாத், ஜாமுய், பூர்னியா, சபவுல், புக்சார், கைமுர் ஆகிய இடங்களில் தலா  2 பேரும் சமஸ்திபுர், ஷியோஹர், சரண், சித்மார்ஹி, மாதேபுராவில் தலா 1  நபரும் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து இரங்கல் தெரிவித்த முதல்வர் நிதிஷ் குமார் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

இதற்கிடையே இந்திய  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில் 38 மாவட்டங்களில்  அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழை முதல் மிக கனத்த மழை  பெய்யும் என்று கூறியுள்ளது. பீகாரின்  அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில், நேற்று முன்தினம் மின்னல் தாக்கியதில் 24 பேர்  இறந்தனர்.

12 பேர் காயமடைந்தனர். ஏற்கனவே புதன்கிழமை இம்மாநிலத்தில் மின்னல் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

மொத்தமாக இருமாநிலங்களிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு 110 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தோர்  குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை