இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம்: 24 மணி நேரத்தில் 447 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம்: 24 மணி நேரத்தில் 447 பேர் பலி

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் டெல்லியை முந்திக் கொண்டு சென்ற நிலையில், மீண்டும் 3ம் இடத்திற்கு தமிழகம் சென்றது. புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 447 பேர் பலியாகி உள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,30,252 பேர் அதிகரித்து மொத்தம் 90,38,807 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,328 அதிகரித்து மொத்தம் 4,69,604 பேர் உயிர் இழந்துள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,077 பேர் அதிகரித்து மொத்தம் 23,56,655 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 267 அதிகரித்து மொத்தம் 1,22,247 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,183 பேர் அதிகரித்து மொத்தம் 4,26,979 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 447 அதிகரித்து மொத்தம் 13,704 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,37,262 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ஒரே நாளில் அதிகபட்சமாக 447 பேர் பலியானது இதுவே முதல்முறையாகும். கடந்த சில தினங்களுக்குமுன் 2,003 பேர் ஒரே நாளில் பலியானதாக பட்டியலில் காட்டப்பட்டது.

ஆனால், அது உத்தரபிரதேசம், டெல்லியில் பலியானோர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியால் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக முதலிடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் வரை தமிழகம் இரண்டாம் இடத்திலும் டெல்லி மூன்றாம் இடத்திலும் இருந்தன.

தற்போது டெல்லியில் பாதிப்பு 59,746-ஐ தாண்டி இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது. நேற்று ஒரே நாளில் டெல்லியில் 63 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,175 ஆக உள்ளது.

தற்போது பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 59,377 பேருடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 2ம் இடத்தை தக்கவைப்பதில் ெடல்லியும், தமிழகமும் போட்டி போட்டு வருகின்றன.

இதற்கு அடுத்தபடியாக 27,317 பேருடன் குஜராத் மாநிலமும், 17,731 பேருடன் உத்தரப் பிரதேச மாநிலமும் உள்ளன.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானிகளுள் ஒருவரான சவுமியா சுவாமிநாதன், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 80 சதவிகித நாடுகளில் குழந்தைகளுக்கு அளிக்கவேண்டிய தடுப்பூசிகள் போடுவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. அதனால் அடுத்த ஒரு ஆபத்துக்கு தயாராக இருக்க வேண்டி இருக்கலாம்.

கொரோனா தடுப்பில் அரசுகள் செலுத்தும் தீவிரத்தன்மை எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவிலான கவனத்தை ஊரடங்கு காலம் முடிந்ததும், பொது சுகாதாரத்திலும், குழந்தைகளுக்கான நோய் தடுப்பூசி போடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இயல்பான பொது சுகாதார சேவைகளையும் தீவிரப்படுத்துவது அவசியமானது.

2021ம் ஆண்டு கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும். கொரோனா கடைசியானது அல்ல; அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக இருக்க வேண்டிய நேரமிது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை