லடாக் எல்லையில் இருதரப்பும் ராணுவ படைகள் குவிப்பு: புவியியல் அமைப்பு இந்திய விமான படைக்கு சாதகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
லடாக் எல்லையில் இருதரப்பும் ராணுவ படைகள் குவிப்பு: புவியியல் அமைப்பு இந்திய விமான படைக்கு சாதகம்

* இருநாட்டு போர் விமான தளங்கள் குறித்து நிபுணர்கள் கருத்து

* சீன பத்திரிகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் வெளியீடு

புதுடெல்லி: லடாக் எல்லையில் இந்திய - சீனா ஆகிய இருதரப்பும் ராணுவ படைகள் குவித்துள்ள நிலையில், புவியியல் அமைப்பு இந்திய விமான படைக்கு சாதகமாக இருப்பது ஏன்? என்பது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மத்திய அரசின் நடவடிக்கைகளை உன்னிப்பாக சீனா அரசு கவனித்து அதனை வெளியிட்டுள்ளது.

இந்தியா- சீனா இடையே கடந்த மே மாதம் முதல் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்திய எல்லை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகளுக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளவும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் மே மாதம் முதல் வாரத்தில் இதுதொடர்பாக எழுந்த பிரச்னை மோதலாக மாறியது.

இரு தரப்பினரும் காயமடைந்தனர். கடந்த ஜூன் 6ம் தேதி ராணுவ அளவிலான முதல் பேச்சுவார்த்தை சீனாவின் மால்டோ எல்லையில் நடந்தது.

இரு தரப்பினரும் சமரசம் செய்து கொள்வதாக உடன்பட்டனர்.

ஆனால், கடந்த 16 - 17ம் தேதி இரவு சீன ராணுவத்தினர் இந்திய ராணுவத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

76 பேர் காயமடைந்தனர். இதற்கு இந்தியா கொடுத்த பதிலடியில் சீன ராணுவத்தினர் 40 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

ஆனால் அதை சீனா இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், நேற்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், லடாக் எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறி தாக்கினால் தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டதாக முடிவு ெசய்யப்பட்டது.

எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில், லடாக் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய துருப்புக்களுக்கு ராணுவ உதவியை வழங்கும் நோக்கில்,  தவுலத் பீக் ஓல்டி (டிபிஓ) விமானத் தளத்தில் 2013ம் ஆண்டில்  கேரியர் ஹெர்குலஸ் ரக ராணுவ விமானம் தரையிறங்கியதில் இருந்து, அண்மையில் தரையிறக்கிய அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வரை, லடாக்கில் இந்திய  விமானப்படை தொடர்ந்து தனது நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, உலகின் அதிநவீன ஆயுதங்கள் கொண்ட அப்பாச்சி ஹெலிகாப்டரையும், அதிக கன ரக ராணுவ சரக்குகளை சுமந்து செல்லும் சினூக் ஹெலிகாப்டரையும் இந்தியா விமானப் படை லடாக் பகுதியில் நிறுத்தியது. மார்ச் 2019ல் சண்டிகரில் உள்ள ஐ. ஏ. எஃப் விமான தளத்தில் சினூக் ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி ஜே. என். யு பல்கலைக்கழகத்தில் சீன விமான சக்தி குறித்து ஆராய்ச்சி செய்து வருபவரும், விமான சக்தி ஆய்வுகளுக்கான    மையத்தின் முன்னாள் மூத்த நிபுணர் கேப்டன் ரவீந்தர் எஸ் சத்வால் கூறுகையில், ‘எல்லைப் பகுதியைப் பொறுத்த வரையில்  சீன விமானப்படையை விட புவியியல் ரீதியான அனுகூலத்தை  இந்தியா விமானப்படை கொண்டுள்ளது.

சீனர்களிடம் 2,100 போர் விமானங்கள் உள்ளன (இன்னும் அதிகமாக இருக்கக்கூடும்) இந்திய விமானப் படையிடம்  850 போர் விமானங்களே உள்ளன. இருப்பினும், இந்த போர் ரக விமானங்களை பயன்படுத்த எல்லைப் பகுதியில் விமானத் தளங்கள் அணுகும் முறையில் இருக்க வேண்டும்.

ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான விமான தளங்களை சீனா கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவைகள் 10,000 அடி உயரத்தில் உள்ள திபெத் பீடபூமியில் உள்ளன.

இந்தியாவுடனான மேற்கு எல்லைப் பகுதியில் ஏழு இரட்டை பயன்பாட்டு கொண்ட விமான நிலையங்கள் சீனா கொண்டுள்ளது.

இவை அனைத்திலும் பொதுமக்கள் விமானங்கள் தரையிறக்குகின்றன. காஷ்கர் மற்றும் ஹோடன் பகுதியைத் தவிர்த்து, மற்ற விமானத் தளங்கள் அனைத்தும் மிக உயரத்தில் உள்ளது.

மேலும்,   சர்ச்சைக்குரிய கட்டுப்பாடு எல்லைக் கோடு பக்ஹ்டியில் இருந்து மிகத் தொலைவில் உள்ளன. சீனா ஏழு விமானத் தளங்களை மட்டும் வைத்துக் கொண்டு, 2,100 போர் ரக விமானங்களை ராணுவ சேவைக்கு பயன்படுத்த முடியாது.

அதிகபட்சமாக, 300 போர் விமானங்களை பயன்படுத்தலாம். இந்தியாவின் மேற்கு எல்லையில், சீனாவை விட இருமடங்கு  எண்ணிக்கையில் விமானத் தளங்கள் உள்ளன.

இவை கடல் மட்டத்தில் இருப்பதால், புவியியல் ரீதியாக நாம் அதிகம் பயனடைகிறோம். மேலும், அதிக எடையுள்ள வெடிகுண்டு சுமைகளை இந்திய விமானப் படையால் இயக்க முடியும்’ என்றார்.

இந்திய விமானப் படையின் ஆய்வு மையத்தின் ஏர் வைஸ் மார்ஷல் கே. கே நோஹர் (ஓய்வு) கூறுகையில், ‘புவியியல் அமைப்பு ரீதியாக இந்தியா விமானப்படை கூடுதல் நன்மையைப் பெற்றிருந்தாலும், அதனை பயன்படுத்துவது தொடர்பான முடிவை அரசாங்கம்  பரிசீலித்த பின்னர் எடுக்க வேண்டும்.

எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்தியா ராணுவத்திற்கு ராணுவ உதவிகளை வழங்க  விமானப்படை  பயன்படுத்துவது குறித்து ஒருபோதும்  சிந்திக்கவில்லை. இருப்பினும், நிர்பந்திக்கப்படும் போது, அது சாத்தியமாகும்’ என்றார்.

இந்நிலையில், எல்லையில் இந்திய படைகள் குவிப்பு, ராணுவத்துக்கு முழு சுதந்திரம், போருக்கான ஆயத்தம் என்று இந்திய தரப்பின் நடவடிக்கைகளை உன்னிப்பாக சீன அரசு கண்காணித்து வருகிறது. அதனை வெளிபடுத்தும் விதமாக சீன அரசாங்கத்தின் பத்திரிகையான ‘குளோபல் டைம்ஸ்’-யில் இன்று வெளியான கட்டுரையின் விபரம் வருமாறு: சீனாவுடன் போர் நடத்த முடியாது என்பது இந்தியாவுக்குத் தெரியும்.கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, இந்தியாவுக்குள் சீனாவிற்கு எதிரான தேசியவாதம் மற்றும் விரோதப் போக்கு கடுமையாக உயர்ந்து வருகிறது. சீனாவிற்கு எதிரான உணர்வை உள்நாட்டில் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அதன் மிகப்பெரிய அண்டை நாடுகளுடன் புதிய ராணுவ மோதலை சந்திக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க இந்திய அரசாங்கம் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீஜிங்கை தளமாகக் கொண்ட ராணுவ நிபுணர் வெய் டோங்சு குளோபல் டைம்சிடம் கூறுகையில், ‘இந்தியப் படைகளால் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முடியும் என்ற மோடியின் கூற்று, இந்திய மக்களை திருப்திப்படுத்தவும், இந்திய துருப்புக்களின் மன உறுதியை உயர்த்தவும்.

உள்நாட்டு பார்வையாளர்களுக்கு பலம் தருவதாக காட்டுகிறது.

மற்றொரு மோதலை கட்டவிழ்த்து விட விரும்பாததால், நிலைமை மோசமடைவதைத் தவிர்ப்பதற்காக மோடி வார்த்தைகளுடன் விளையாடுகிறார்.

ராணுவத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மற்றும் சர்வதேச செல்வாக்கிலும் சீனாவின் திறன் இந்தியாவை விட உயர்ந்தது.
இந்தியா அண்டை நாடான பாகிஸ்தானுடனோ அல்லது பிற அண்டை நாடுகளுடனோ மோதலில் இருக்கும்போது, ​​அதற்கு அந்நாட்டின் தேசியவாதம் உதவும்.

ஆனால் அது சீனாவுக்கு வரும்போது, ​​இது வேறு கதையாக இருக்கும். சீனா எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இந்திய அரசும், ராணுவத் தலைவர்களும் புரிந்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்திய அரசியல்வாதிகள் அறியாமையும், ஆணவமும் கொண்டவர்கள். ‘எங்கள் (இந்தியா) தரப்பில் 20 பேர் உயிர் தியாகம் செய்த நிலையில், அவர்களின் [சீனா] தரப்பில் குறைந்தது இருமடங்கு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும்’ என்று இந்தியாவின் சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் வி. கே. சிங் தெரிவித்துள்ளார்.

சீனாவை மேலும் தூண்டிவிட சீன வல்லுனர்கள் அரசாங்கத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை.

சீனா கல்வான் பள்ளத்தாக்கு மோதல் பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடாததற்குக் காரணம், சீனாவில் தேைவயற்ற அழுத்தத்தை தவிர்க்க அரசு விரும்புகிறது. ஏனெனில் சீனாவின் இறப்பு எண்ணிக்கை 20க்கும் குறைவாக இருந்தால், இந்திய அரசாங்கம் மீண்டும் அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

இப்போதைக்கு, இந்தியா கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதார பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். அண்டை நாடுகளுடன் மோதல் ஏற்படுவது இந்தியாவுக்கு எந்த நன்மையும் செய்யாது.

மோதலைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் சீனா ஈடுபட்டு வருகிறது.

ஆனால் இது எந்த நாட்டிலிருந்தும், குறிப்பாக இந்தியாவிலிருந்து ஆத்திரமூட்டல் அல்லது ஆக்கிரமிப்புக்கு சீனா பயப்படுவதாக அர்த்தமல்ல. சீன ராணுவ பார்வையாளர்கள், முக்கிய சீன துருப்புக்கள் சம்பந்தப்பட்ட ராணுவ மோதல் நடந்தால், 1962ல் நடந்த போரைப் போலவே இருக்கும் என்றும், சீன ராணுவத்தின் அனைத்து துருப்புக்கள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை ஒன்றிணைக்கும் தகவல்தொழில்நுட்ப போர் முறையைக் கொண்டுள்ளது.

ஆனால், இந்தியப் படைகள் வெவ்வேறு நாடுகளில் இருந்து வாங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன. அவை ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைக்கவில்லை.

இந்திய பொருளாதார வல்லுனர் சுவாமிநாதன், இந்திய செய்தி ஊடகம் ஒன்றில், ‘சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இடைவெளி ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் 1962ல் இருந்ததை விட ஐந்து மடங்கு பெரியது’ என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்தியா ராணுவ நடவடிக்கையில் ஈடுபட முயற்சித்தால், அது 1962ம் ஆண்டை விட ஐந்து மடங்கு பெரிய அளவில் இருக்கும். தற்காப்பு எதிர் தாக்குதலில், சீனா தனது சொந்த நிலப்பரப்பைப் பாதுகாக்கும்.

அவ்வாறு வெற்றிகரமாக வெளிவந்த பின்னர், இந்தியா மீண்டும் அந்த நிலப்பரப்பைக் கோர முடியாது என்று சீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'ராஜ்நாத் சிங் ரஷ்யா பயணம்'
இந்திய - சீன எல்லை பிரச்னைக்கு மத்தியில், ரஷ்யா - இந்தியா- சீனா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இடையிலான கூட்டம் நாளை காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

இதில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். அதேபோல் வரும் 24ம் தேதி ரஷ்யாவில் நடைபெறும் அந்நாட்டின் வெற்றி தினத்தில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாட்கள் பயணமாக மாஸ்கோ செல்கிறார்.

அதனால், எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், இந்தியா - சீனா ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் நடத்தப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'ராணுவத்திலும் சீன பொருட்கள்'
ராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பு கியர் மற்றும் புல்லட் ப்ரூஃப் கவச உடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சீன மூலப்பொருட்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன. கடந்த 2017ம் ஆண்டு இந்திய ராணுவத்துக்கு 1. 86 லட்சம் புல்லட் ப்ரூஃப் உடைகளை வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனமும் இதில் அடங்கும்.

மற்ற சர்வதேச சந்தைகளை விட சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் சுமார் 60% -70% மலிவானவை என்பதால், அந்நாட்டில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் வன்முறை சம்பவம் நடைபெற்ற இரண்டு  நாட்களுக்குப் பிறகு, ராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பு கியர் மற்றும்  புல்லட் ப்ரூஃப் கவச உடைகளின் உற்பத்தியாளர்களை பாதுகாப்பு அமைச்சகம்  தொடர்பு கொண்டது. அதில், லே உட்பட சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில்  நிறுத்தப்பட்டிற்கும் ராணுவ வீரர்களுக்குத் தேவைப்படும்  2 லட்சம்  பாதுகாப்பு கவசங்களை உடனடியாக உற்பத்தி செய்து கொடுக்குமாறு அமைச்சகம்  கோரிக்கை விடுத்ததுள்ளது.

ஆனால், எல்லையில் எதிர்பாராத வன்முறை அரங்கேறியதால், ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கான குரல்கள் தற்போது எழுந்துள்ளன. இதுகுறித்து நிதி ஆயோக்  உறுப்பினரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முன்னாள் தலைவருமான வி. கே சரஸ்வத், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஒரு வருடத்திற்கு முன்பே, புல்லட் புரூஃப் போன்ற முக்கிய கவச உடைகளுக்கு சீன மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டது.அதன் தரத்தில் எங்களுக்கு சந்தேகம் இருந்தது. விலை மதிப்பீடு காரணமாக சீனாவிலிருந்து மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதை தெளிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

துருப்புக்கள் அணியும் புல்லட் புரூஃப் கவசங்கள் மற்றும்  தொலைதொடர்பு  சாதன மூலப்பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை ஊக்குவிக்கக்கூடாது’ என்றார். மேலும், ராணுவத்திற்கு புல்லட் புரூஃப் கவசங்கள்  வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள  எஸ். எம். பி. பி பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் எஸ். சி. கன்சால் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘நாங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் மூலப்பொருட்களை சார்ந்துள்ளோம்.

இருப்பினும்,  நாட்டு மக்களின் மனநிலையை நாங்கள் உணர்ந்து வருகிறோம்.

தேவைப்பட்டால் இறக்குமதிக்கான மாற்று வழிகளைப் பார்ப்போம்’ என்றார்.

.

மூலக்கதை