புதுச்சேரியில் மீண்டும் நேரக் கட்டுப்பாடு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதுச்சேரியில் மீண்டும் நேரக் கட்டுப்பாடு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பேரிடர் மீட்பு துறை மூலமாக கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை 3 மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றரை மாதம் வரை 3 பேராக இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து இப்போது 218ஆக உயர்ந்துள்ளது.

தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து யார் வந்தாலும், அக்கம் பக்கத்து வீட்டினர் இதுபற்றி வருவாய், காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். ஒருசிலர் முகக்கவசம் அணியாமல் வருகின்றனர்.

முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு இப்போது ரூ. 100 அபராதம் வசூலிக்கப்படுகிறது. அது இனி ரூ. 200 ஆக உயர்த்தப்படும்.

கொரோனா பரவாமல் தடுக்க புதுச்சேரி மாநிலத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகள், பெட்ரோல் பங்க்குகள் திறந்திருக்கும்.

உணவகங்களில் மதியம் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். அதன்பிறகு இரவு 9 மணி வரை பார்சல்கள் வாங்கி செல்லலாம்.

தொழிலாளர்கள் சென்று வருவதற்கான தேவையான அனுமதி பாஸ் கொடுக்கப்படும். கட்டிட தொழிலாளர்கள் பணி செய்ய எந்த தடையும் இல்லை.

விவசாயம், தொழிற்சாலை, கட்டுமான பணிகளுக்கு எந்த தடையும் கிடையாது. மதுக்கடைகளும் மதியம் 2 மணிக்குள் மூட வேண்டும்.

இந்த நடைமுறைகள் அனைத்தும் நாளை (23ம் தேதி) காலை 6 மணி முதல் அமல்படுத்தப்படும். இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை