ரூ.150 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட ஆந்திர மாநில எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கு சிறை: இஎஸ்ஐ மாஜி அதிகாரியும் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரூ.150 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட ஆந்திர மாநில எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கு சிறை: இஎஸ்ஐ மாஜி அதிகாரியும் கைது

திருமலை: இஎஸ்ஐ மருத்துவமனையில் மருந்து, உபகரணங்கள் வாங்கியதில் 150 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட ஆந்திர மாநில எதிர்க்கட்சி துணைத் தலைவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆந்திராவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை நடந்த சந்திரபாபு ஆட்சியில், இஎஸ்ஐ மருத்துவமனையில் மருந்துகள், உபகரணங்கள் வாங்கியதில் ₹150 கோடி முறைகேடுகள் நடந்திருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் விஜிலென்ஸ் அறிக்கை வெளியிட்டது.

இவ்வழக்கு தொடர்பாக ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை காகுளத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான அச்சம் நாயுடுவை கைது செய்தனர். அவரை பஸ்சில் அழைத்துச்சென்று விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அச்சம் நாயுடுவை 14 நாட்கள் விஜயவாடா கிளைச்சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து அவரது வக்கீல்கள், அச்சம்நாயுடுவுக்கு கடந்த 11ம் தேதி ஆபரேஷன் நடந்ததாகவும் இதனால் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியிருந்தும் அவரை போலீசார் கைது செய்து 500 கிலோ மீட்டர் தூரம் பஸ்சில் அழைத்து வந்ததால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என்றனர்.

இதையடுத்து நீதிபதிகள் அனுமதிக்கு பிறகு விஜயவாடா கிளைச்சிறைக்கு அச்சம்நாயுடு கொண்டு செல்லப்பட்டார்.

குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே ₹150 கோடி முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக இஎஸ்ஐ மருத்துவமனையின் ஓய்வுப்பெற்ற முன்னாள் இயக்குனர் ரமேஷ்குமாரும் திருப்பதி அவிலாலாவில் கைது செய்யப்பட்டார்.

அவரும் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

உள்துறை அமைச்சர் சுச்சரித்தா கூறியதாவது;
இஎஸ்ஐ மருத்துவமனையில் முறைகேடுகள் நடப்பதாக ஆரம்பத்தில் இருந்து கூறி வந்தோம். தற்போது அவை நிரூபணமாகியுள்ளது.

மக்கள் பணம் ஊழல் செய்யப்பட்டுள்ள நிலையில் அரசு எவ்வாறு பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியும். ஊழல் நடந்தது குறித்து விசாரணை செய்து உரிய நோட்டீஸ் வழங்கப்பட்ட பிறகு அச்சம் நாயுடு கைது செய்யப்பட்டார்.

சந்திரபாபு கூறியதைபோல் தீவிரவாதியை போன்று அவரை கைது செய்யவில்லை. இஎஸ்ஐ மருத்துவமனை மத்திய அரசுடையதாக இருந்தாலும் அது நம் மாநிலத்தில் உள்ளது.

இதன் பின்னணியில் வேறு யாருக்கு தொடர்பு இருந்தாலும் அவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறு கூறினார்.

.

மூலக்கதை