வெளியூர் நோயாளிகளுக்கு சிகிச்சை விவகாரம் முதல்வர் தடுத்தார்... ஆளுநர் அனுமதித்தார்..!: கொரோனாவுக்கு மத்தியில் மீண்டும் அதிகார மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெளியூர் நோயாளிகளுக்கு சிகிச்சை விவகாரம் முதல்வர் தடுத்தார்... ஆளுநர் அனுமதித்தார்..!: கொரோனாவுக்கு மத்தியில் மீண்டும் அதிகார மோதல்

புதுடெல்லி: டெல்லியில் வெளியூர் நோயாளிகளுக்கு சிகிச்சை கூடாது என அம்மாநில முதல்வர் தடுத்தார். ஆனால், ஆளுநர் அனுமதித்துள்ளார்.

கொரோனாவுக்கு மத்தியில் இருவருக்கும் மீண்டும் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில தினங்களுக்கு முன் ‘வெளிமாநிலத்தை  சேர்ந்த நபர்களுக்கு இனி மாநில அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது.

டெல்லி அரசின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் டெல்லி மக்கள் மட்டுமே சிகிச்சை பெறுவார்கள். பிற மாநில மக்கள் மத்திய அரசின் அதிகார வரம்பைக் கொண்ட எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்’ என்று அதிரடியாக அறிவித்தார்.


இந்நிலையில், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் தலைவரும், துணைநிலை ஆளுநருமான அனில் பைஜால், ‘டெல்லி முதல்வரின் அறிவிப்பு டெல்லியில் வாழும் மக்களுக்கு ஒரு பெரிய பிரச்னையையும், சவாலையும் உருவாக்கும். டெல்லியை சேராதவர் என்ற காரணத்தால் எந்தொரு நபருக்கும் சிகிச்சை மறுக்கப்பட கூடாது’ என்று மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆளுநரின் இந்த உத்தரவை தொடர்ந்து டெல்லி முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ெகாரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் நாடு முழுவதிலும் இருந்து வரும் மக்களுக்கு சிகிச்சையளிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் நாங்கள் சேவை செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். அனைவருக்கும் சிகிச்சை அளிக்க நாங்கள் முயற்சிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக டெல்லி முதல்வர் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதை கண்டறிய இன்று அவருக்கு பரிசோதனை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, இன்று கொரோனா சமூக பரவல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் ெதாற்று பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் உள்ள நிலையில் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும், 874 பேர் இதுவரை பலியாகியும் உள்ளனர்.

இவ்வளவு நெருக்கடியான நிலையில், முதல்வரின் அறிவிப்பும், ஆளுநரின் அறிக்கையும் இரு அதிகார மையங்களுக்கு இடையிலான மோதலாக பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை