ஓபிசி மாணவர்கள் மருத்துவ ஒதுக்கீடு விவகாரம் அதிமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஓபிசி மாணவர்கள் மருத்துவ ஒதுக்கீடு விவகாரம் அதிமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு

புதுடெல்லி: மருத்துவ படிப்பில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் மத்திய அரசுக் கோட்டாவுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கு இடம் ஒதுக்காமல் புறக்கணிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு அமல்படுத்தப்பட்டப்பின், தற்போது மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு வழங்கும் 50 சதவீத முதுநிலை, 15 சதவீத இளநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இட ஒதுக்கீடு மூன்றாண்டுகளாக ஒதுக்கவில்லை.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய தொகுப்பிற்கு அனைத்து மாநிலங்களும் முதுநிலைப் படிப்பிற்காக 7,981 இடங்களை அளித்திருந்தாலும், அதில் இந்த வருடம் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இடம் ஒதுக்கவில்லை.

மத்திய அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு தரப்பட்ட 1,378 இடங்களில் மட்டுமே, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு 27 சதவீத அடிப்படையில் 371 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

திமுக, பாமக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில் தமிழக அரசும் கடந்த வாரம் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
அதில், ‘இளநிலை மருத்துவ படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவ படிப்பு, மருத்துவ டிப்ளமோ படிப்பு உள்ளிட்டவற்றில் மாநிலங்களால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்’ எனக் கோரியுள்ளது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை வருகிற 11ம் தேதி (நாளை மறுநாள்) வருகிறது. இதற்கிடையே, அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை