டெல்லியில் காட்டுத்தீயாய் பரவுகிறது கொரோனா: மாத இறுதியில் பாதிப்பு 1 லட்சத்தை எட்டும் என்ற கணிப்பால் பீதி!

தினகரன்  தினகரன்
டெல்லியில் காட்டுத்தீயாய் பரவுகிறது கொரோனா: மாத இறுதியில் பாதிப்பு 1 லட்சத்தை எட்டும் என்ற கணிப்பால் பீதி!

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த மாத இறுதியில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டும் என்ற கணிப்பால் பீதி நிலவுகிறது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,320 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது தொடர்பாக ஆய்வு செய்ய டெல்லி அரசு அமைத்த வல்லுநர்கள் அடங்கிய 5 நபர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், இம்மாத இறுதியில் டெல்லியில் 15,000 படுக்கைகளுக்கான தேவை ஏற்படும் என்றும், அதுவே அடுத்த மாதம் மத்தியில் 42,000 படுக்கைகளுக்கான தேவையாக மாறும் அபாயம் உள்ளதாக வல்லுநர் குழு எச்சரித்துள்ளது. டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை நிலவுகிறது. டெல்லி அரசின் சுகாதாரத்துறை செயலியில் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இருப்பதாக காட்டும் நிலையில், உண்மை நிலை வேறு விதமாக உள்ளது. உதாரணத்திற்கு டெல்லியில் ஃபோர்டிஸ் குழும மருத்துவமனைகளில் 32 படுக்கைகள் காலியாக உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை செயலியில் காட்டுகிறது. ஆனால், தீவிர சிகிச்சை பிரிவு உள்பட அனைத்து படுக்கைகளிலும் நோயாளிகள் சிகிச்சையில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று ஹோலி குடும்ப நல மருத்துவமனையில் 69 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை செயலி காட்டுகிறது. ஆனால், அங்கு ஒரு படுக்கை கூட காலியாக இல்லை என்பதே உண்மை நிலை. மேக்ஸ் மருத்துவமனையில் 200 படுக்கைகள் காலியாக உள்ளதாக செயலியில் காட்டும் நிலையில், 429 படுக்கைகளிலும் நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், இவ்விகாரம் குறித்து பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினிகுமார் துபே, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்க கூடாது என்று, தனியார் மருத்துவமனைகளை எச்சரித்துள்ளோம். படுக்கைவசதிகளை அதிகப்படுத்தி சிகிச்சையை தீவிரப்படுத்த கூறியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை