கொரோனா பாதிப்பில் சீனாவை முந்துகிறது மகாராஷ்டிரா!! : நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10,000 ரெம்டிசிவிர் குப்பிகளை வாங்குகிறது மராட்டியம்

தினகரன்  தினகரன்
கொரோனா பாதிப்பில் சீனாவை முந்துகிறது மகாராஷ்டிரா!! : நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10,000 ரெம்டிசிவிர் குப்பிகளை வாங்குகிறது மராட்டியம்

மும்பை : மகாராஷ்டிராவில் பத்தாயிரம் ரெம்டிசிவிர் குப்பிகளை  வாங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், விரைவில் பாதிப்பு எண்ணிக்கை சீனாவை முந்த உள்ளது. இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82,968 ஆக உள்ளது. இதுவரை 2,969 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 37,390 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு இதே வேகத்தில் அதிகரித்தால் ஓரிரு நாட்களில் சீனாவை மகாராஷ்டிர மாநிலம் முந்திவிடும்.சீனாவில் சனிக்கிழமை நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,036 ஆக உள்ளது. சீனாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,634 ஆக உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பத்தாயிரம் ரெம்டிசிவிர் குப்பிகளை விலைக்கு வாங்கி கையிருப்பில் வைக்கப்போவதாக மராட்டிய சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், \'கொரோனா சிகிச்சைக்கு ரெம்டிசிவிர் பயன்படுத்தப் திட்டமிடப்பட்டுள்ளது. விலை உயர்ந்த இந்த மருந்து ஏழை மக்களுக்குக் கிடைக்கச் செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடையவர்களை குணப்படுத்த ரெம்டிசிவர் மிகுந்த பயன் அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\' எனத் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை