இந்திய 'ட்ரோன்' சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாக்., மீண்டும் 'கப்சா'

தினமலர்  தினமலர்
இந்திய ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாக்., மீண்டும் கப்சா

இஸ்லாமாபாத்: 'எல்லைக் கட்டுப்பாடு கோட்டை கடந்து, பாக்., பகுதிக்குள் ஊருவிய, இந்தியாவின் 'ட்ரோன்'ஐ சுட்டு வீழ்த்தியதாக' மீண்டும் பாகிஸ்தான் 'ரீல்' விட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, கடந்த ஆண்டு, பிப்ரவரி, 14ல் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் பகுதிக்குள் சென்ற நம் விமானப்படை விமானங்கள், பயங்கரவாத பயிற்சி முகாம்களை குண்டுகள் வீசி அழித்தன.


இந்திய விமானப்படை விமானி, 'விங் கமாண்டர்' அபிநந்தனை, பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. இந்தியா கொடுத்த நெருக்கடிக்குப் பயந்து, பாக்., அரசு அபினந்தனை, இரண்டு நாட்களில் விடுவித்தது. அது முதல், இந்திய - பாக்., எல்லையில் பதற்றம் தொடர்கிறது. எல்லைக் கட்டுபாடு கோடு பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம் தாக்குதல் நடத்துவதும், இந்திய ராணுவம் விரட்டியடிப்பதும், அடிக்கடி நடக்கும் சம்பவமாகிவிட்டது.

இந்நிலையில், எல்லை தாண்டி கன்ஜார் பகுதிக்குள் நுழைந்து உளவு பார்த்த இந்தியாவின் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாக். தெரிவித்துள்ளது. மேலும் இது இந்த ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட 8வது ட்ரோன் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இதேபோல இரு முறை எல்லை தாண்டி வந்த இந்தியாவின் குட்டி விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக, பாக். கூறியது. ஆனால் அதை இந்தியா மறுத்துள்ளது.

மூலக்கதை