எல்லை பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி முடிவில்லாமல் முடிந்தது இந்தியா - சீனா பேச்சு: இருநாட்டு ராணுவமும் புதிய முடிவு

தினகரன்  தினகரன்
எல்லை பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி முடிவில்லாமல் முடிந்தது இந்தியா  சீனா பேச்சு: இருநாட்டு ராணுவமும் புதிய முடிவு

புதுடெல்லி: லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய - சீன ராணுவம் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே, பேச்சுவார்த்தையை தொடர இருதரப்பும் முடிவு செய்துள்ளன.  கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இரு நாடுகளும் அங்கு படைகளை குவித்துள்ளதால் போர் பதற்றம் ஏற்பட்டது. இப்பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இதன்படி, இருநாடுகளுக்கு இடையே தூதரக ரீதியான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. இதில், பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைதியான முறையில் பிரச்னைகளை பேசித் தீர்க்க முடிவு செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவங்களின் லெப்டினென்ட் ஜெனரல்கள் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.  கிழக்கு லடாக்கின் சுஸுல் செக்டார் பகுதியைச் சோ்ந்த மால்டோவில் நடந்த இப்பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரலும் லே பகுதியின் தளபதியுமான ஹரீந்தா் சிங்கும், சீன தரப்பில் திபெத்தின் ராணுவத் தளபதியும் பங்கேற்றனர். இதுதொடர்பாக ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா-சீனா எல்லையின் சூழல் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே தூதரக ரீதியாகவும் ராணுவ தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இந்த கட்டத்தில் தற்போதைய நடவடிக்கைகள் பற்றி ஊகத்தின் அடிப்படையிலும் ஆதாரமின்றியும் தகவல்கள் வெளியிடுவது எந்த வகையிலும் உதவியாக இருக்காது. எனவே, மீடியாக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது,’ என குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்மட்ட கூட்டம் தொடர்பாக எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. 12 கட்ட பேச்சுவார்த்தைஎல்லைப் பிரச்னைக்கு தீா்்வு காண்பது தொடர்பாக இந்திய - சீன  ராணுவங்களின் தளபதிகள் இடையே ஏற்கனவே 12 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

மூலக்கதை