திருப்பூர் அருகே 'கிராவல்' மண் கடத்தி விற்பனை: கண்டுகொள்ளாத கனிம வளத்துறை

தினமலர்  தினமலர்
திருப்பூர் அருகே கிராவல் மண் கடத்தி விற்பனை: கண்டுகொள்ளாத கனிம வளத்துறை

திருப்பூர்:திருப்பூர் அருகே, விடிய விடிய 'கிராவல்' மண் கடத்தி விற்பனை செய்யப்படுகிறது. இவ்விஷயத்தில், கனிமவளத்துறை, வருவாய்த்துறையினர் 'கண்டுகொள்ளாமல்' இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு கும்பல், காங்கயம் அருகிலுள்ள ஊதியூர், நிழலி கவுண்டம்பாளையம் அருகே செங்கோடம்பாளையம், எல்லைப்பாளையம் புதுார், சூரியநல்லுார் கிராமங்களில், 50க்கும் மேற்பட்ட தனியார் பட்டா நிலங்களில், 'அரசு அனுமதி' என்ற பெயரில், அளவுக்கு அதிகமாக மண் எடுத்து விற்று வருகின்றனர்.
உள்ளூரை சேர்ந்த சிலரின் ஆதரவோடு, விடியவிடிய மண் எடுக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. போலீசார், வருவாய்த்துறை, கனிமவளத்துறையினர் என, யாரும் கண்டுகொள்ளாததால் மண் திருட்டு 'ஜோராக' நடந்து வருகிறது.அனுமதி ஒருமுறை; அள்ளுவது பலமுறைகிராம மக்கள் கூறியதாவது:புதுக்கோட்டையை சேர்ந்த கும்பல், மூன்று கிராமங்களில், அனுமதி பெற்றதை விட, அளவுக்கு அதிகமாக தோண்டி மண் அள்ளி விற்று வருகின்றனர். 20 அடி அளவுக்கு தோண்டப்பட்டுள்ளது. ஒரு டிப்பர் லாரி மண், 2,300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஊத்துக்குளியில் பெறப்பட்ட 'பர்மிட்'டை, இங்கு கொண்டு வந்து அதிகாரிகளிடம் காட்டி மண் எடுத்து வருகின்றனர். இதனால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.அதிகாரிகள் 'மவுனம்' மண் திருட்டு குறித்து தொடர்ந்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார், போலீசார், கனிமவளத்துறையினர் என, யாரும் கண்டுகொள்ளவில்லை. நடவடிக்கை எடுக்காத நிலையில், புகார் கொடுத்தவர்களை பற்றி, மண் கடத்தும் கும்பலுக்கு அதிகாரிகளே தகவல் கொடுத்து விடுகின்றனர். இதனால், மக்கள் புகார் கொடுக்க கூட அச்சப்படுகின்றனர்.'நடவடிக்கை எடுக்கப்படும்'ஊதியூர் அருகில் நடக்கும் மண் கடத்தல் குறித்து, தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமாரிடம் கேட்டதற்கு, ''கிராவல் மண் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை. இருந்தாலும் சம்பந்தப்பட்ட கிராமங்களில் ஆய்வு செய்து, விசாரித்து உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

மூலக்கதை