இந்திய கால்பந்து நட்சத்திரம்: ஹம்சா கொரோனாவுக்கு பலி

தினகரன்  தினகரன்
இந்திய கால்பந்து நட்சத்திரம்: ஹம்சா கொரோனாவுக்கு பலி

திருவனந்தபுரம்: இந்திய கால்பந்து அணி முன்னாள் நட்சத்திர வீரர் ஹம்சா கோயா, கொரோனா தொற்று காரணமாக காலமானார். கேரள  மாநிலம், மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியை சேர்ந்தவர் ஹம்சா கோயா (61). இவர் 1970-80 காலகட்டத்தில் இந்திய கால்பந்து அணிக்காக விளையாடி உள்ளார். தேசிய அளவில் மஹாராஷ்டிரா  மாநிலத்துக்காக சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியிலும், பிரபல கால்பந்து கிளப் அணிகளான மோகன் பஹான், முகமதன்ஸ் சார்பாகவும் பலமுறை களமிறங்கி உள்ளார்.   மும்பையில் இருந்த இவர், மேத மாதம் 21ம் தேதி  சொந்த ஊருக்கு திரும்பினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு  நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதால், மஞ்சேரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஹம்சா கோயா மரணமடைந்தார். இதையடுத்து கேரளாவில் கொரோனா இறப்பு 15 ஆக  உயர்ந்துள்ளது. இதற்கிடையே இவரது மனைவி, மகன், மகனின் 5 மாத குழந்தை உட்பட  இக்குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்குடும்பத்தினர்  மஞ்சேரி பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று வந்துள்ளனர். இதையடுத்து  அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தையும் மூட போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஹம்சா கோயா மறைவுக்கு இந்திய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை