தின்ன தின்ன திகட்டாத எறும்பு தின்னிகளுக்கு நம்பர்- 1 பாதுகாப்பு: அழிவில் இருந்து காக்க சீனா அதிரடி

தினகரன்  தினகரன்
தின்ன தின்ன திகட்டாத எறும்பு தின்னிகளுக்கு நம்பர் 1 பாதுகாப்பு: அழிவில் இருந்து காக்க சீனா அதிரடி

பீஜிங்: வுகான் கடல் உணவு சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படும் நிலையில், சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும் எறும்பு தின்னிகளை பாதுகாக்க, சீன அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.  சீனாவின் வுகான் நகரில் உள்ள கடல் உணவு பொருட்கள் சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. இந்த சந்தை தற்போது மூடப்பட்டுள்ளது. மேலும், வவ்வால் மற்றும் பாம்புகளுக்கு அடுத்தப்படியாக எறும்பு தின்னிகளிடம் இருந்தும் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், எறும்பு தின்னிகளை இரண்டாம் நிலை பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து, முதல் நிலை பாதுகாக்கப்பட்ட விலங்காக நேற்று முன்தினம் சீன அரசு அறிவித்துள்ளது. எறும்பு தின்னிகளின் கறி மிகவும் சுவைமிக்கதாக சீனர்கள் கருதுகின்றனர். எனவே, இதனை உண்ணுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், எறும்பு தின்னிகளின் செதில்கள் பாரம்பரிய சீன மருத்துவத்தில் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எறும்பு தின்னிகளை வேட்டையாடி தின்பதில் சீனர்களுக்கு அலாதி இன்பம். இதனால், அவற்றை அதிகளவில் வேட்டையாடுகின்றனர். இதன் காரணமாக, அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால்தான், இதை முதல் நிலை பாதுகாக்கப்பட்ட வன விலங்காக சீனா அறிவித்துள்ளது.  உலக விலங்குகள் பாதுகாப்பு விஞ்ஞானி சன் குவான்ஹய் கூறுகையில், “உலகில் உள்ள 8 அரியவகை எறும்பு தின்னிகளும் அவை வாழும் நாடுகளில் மிக ஆபத்தான நிலையில் உள்ளன. சீனாவில் 17 மாகாணங்களில் எறும்பு தின்னிகள் வாழ்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில் எறும்பு தின்னிகளின் சட்ட விரோத வர்த்தகம் அதிகரித்துள்ளது. எனவே, இதை தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை,” என்றார்.* கடந்த 2003ம் ஆண்டு சீனாவில் எடுக்கப்பட்ட தேசிய கணக்கெடுப்பின்படி எறும்பு தின்னிகளின் எண்ணிக்கை 64 ஆயிரமாக குறைந்துள்ளது. * அவை வாழும் மாகாணங்களில் எண்ணிக்கையும் 11 ஆயிரமாக குறைந்துள்ளது.* 2007ம் ஆண்டு எறும்பு தின்னிகளை வேட்டையாடுவதற்கு சீனா தடை விதித்தது.* 2018ம் ஆண்டு ஆகஸ்டில் எறும்பு தின்னிகள் மற்றும் அவற்றின் பொருட்களின் வணிக இறக்குமதியை சீன அரசு தடை செய்தது.

மூலக்கதை